வருவாய் இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் - கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை


வருவாய் இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் - கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை
x
தினத்தந்தி 17 Dec 2020 7:44 PM IST (Updated: 17 Dec 2020 7:44 PM IST)
t-max-icont-min-icon

வருவாய் இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் நெல்-3 (நவரை) பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.421, உளுந்து பயிருக்கு ரூ.245, மணிலா பயிருக்கு ரூ.194, எள்ளுக்கு ரூ.144, கரும்புக்கு ரூ.2,569, வாழைக்கு ரூ.1,778, கத்திரிக்கு ரூ.740, வெங்காயம் ரூ.798, மிளகாய் ரூ.1,000 மற்றும் மரவள்ளிக்கு ரூ.1,335 பிரீமியமாக செலுத்த வேண்டும். நடப்பு ராபி பருவத்தில் காப்பீட்டு திட்டத்தினை செயல்படுத்த அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நெல்- நவரை பருவத்தில் 13 வட்டாரங்களில் 395 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உளுந்து, மணிலா மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கு 34 குறுவட்டங்களும், எள் பயிருக்கு 14 குறுவட்டங்களும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. நெல், வெங்காய பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் 15.2.2021, அதுபோல் உளுந்துக்கு காப்பீடு செய்ய 18.1.2021 அன்றும், மணிலா பயிருக்கு 20.1.2021 அன்றும் எள், மரவள்ளி பயிருக்கு 1.2.2021 அன்றும் கரும்பு பயிருக்கு 31.10.2021 அன்றும் வாழைக்கு 1.2.2021 அன்றும், கத்திரிக்கு 18.1.2021 அன்றும், மிளகாய்க்கு 30.1.2021 அன்றும் கடைசி நாளாகும்.

பருவநிலை மாற்றம், எதிர்பாராத வகையில் புதிய வகை பூச்சிநோய் தாக்குதல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றினால் பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டு அதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்வதற்கும் தொடர்ந்து விவசாயிகள் வேளாண் உற்பத்தியினை செய்வதற்கும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் உறுதுணையாக உள்ளதால் சிறிய அளவிலான காப்பீட்டு கட்டணத்தை செலவினமாக கருதாமல் அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பெரியசாமி, தோட்டக்கலை துணை இயக்குனர் இந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story