கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் 232 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகள் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்


கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் 232 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகள் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்
x
தினத்தந்தி 18 Dec 2020 7:23 PM IST (Updated: 18 Dec 2020 7:23 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் உள்ள 232 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.விழாவில் தமிழக பள்ளி கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, 3 மாவட்டங்களில் உள்ள 232 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது. இதுதொடர்பாக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு, பின்னர் முதல்-அமைச்சர் முடிவை அறிவிப்பார்.

இங்கு பள்ளிகளுக்கான 3 ஆண்டு கால அங்கீகாரத்தை, 5 ஆண்டு காலமாக நீட்டித்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அதற்கான சாத்திய கூறுகள் இருந்தால் செய்து தரப்படும்.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் வருகிறது. மின்தடை இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இதனால் இங்கு பலரும் தொழில் தொடங்க வருகிறார்கள். கல்வி முறையில் இந்தியாவில் பிற மாநிலங்கள் வியக்கும் வகையில் நமது மாநிலம் உள்ளது. மேலும் நமது பாடத்திட்டம் தரம் உயர்ந்த நிலையில் உள்ளது. முதல்-அமைச்சரின் திட்டங்களில் சிறப்பான ஒரு திட்டமாக ஏரி, குளங்கள் குடிமராமத்து திட்டம் உள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. அசோக்குமார், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ், பர்கூர் ராஜேந்திரன், தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி, ஒன்றியக்குழு தலைவர்கள் கிருஷ்ணகிரி அம்சா ராஜன், சூளகிரி லாவண்யா ஹேம்நாத், முன்னாள் எம்.பி. பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. முனிவெங்கட்டப்பன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபால், தனியார் பள்ளி நிர்வாகிகள் இளங்கோவன், நந்தகுமார், ராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி வரவேற்றார். முடிவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நன்றி கூறினார்.

Next Story