மாவட்டம் முழுவதும் மக்கள் சிகிச்சை பெற 42 மினி கிளினிக் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்


மாவட்டம் முழுவதும் மக்கள் சிகிச்சை பெற 42 மினி கிளினிக் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
x
தினத்தந்தி 18 Dec 2020 11:07 PM IST (Updated: 18 Dec 2020 11:07 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் சிகிச்சை பெற 42 மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல்,

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் ஊரிலேயே மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக திண்டுக்கல் நாகல்நகர், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் சென்னமநாயக்கன்பட்டி, கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில் புளியமரத்துக்கோட்டை ஆகிய ஊர்களில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார். இதையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நிருபர்களிடம் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் 80 சதவீத குழந்தைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கின்றன. அந்த அளவுக்கு சுகாதாரத்துறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் உள்பட 11 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்கியதால், 1,650 மருத்துவ இடங்கள் புதிதாக கிடைத்துள்ளன. மேலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம், அரசு பள்ளியில் படித்த 313 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

மேலும், ஏழை மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைக்கும் வகையில், மருத்துவ உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதன்படி புதிய முயற்சியாக அரசு மருத்துவமனை, சுகாதார நிலையம் இல்லாத ஊர்களில் வசிக்கும் மக்கள், அந்தந்த ஊரிலேயே சிகிச்சை பெறுவதற்கு அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்துள்ளார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 42 ஊர்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகிறது.

இந்த மினி கிளினிக் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்படும். இங்கு சிங்க், ஆயுஷ் மருந்துகள், தொற்றா நோய் மருந்துகள், டெட்டானஸ் ஊசி, மருந்து ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின், சிறுநீர் பரிசோதனை, மகப்பேறு பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனையும் செய்யப்படுகிறது. மேலும் காய்ச்சல், சளி, உடல்வலி உள்ளிட்ட நோய்களுக்கு மக்கள், வசிக்கும் இடத்திலேயே சிகிச்சை பெறலாம். இதனை அனைத்து மக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ., நலப்பணிகள் இணை இயக்குனர் சிவக்குமார், துணை இயக்குனர் ஜெயந்தி, நளினி, அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்சா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் லதா தர்மராஜ், அம்பிளிக்கை ஊராட்சி தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story