தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை: அய்யம்பேட்டையில் 55 மி.மீட்டர் பதிவு


தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை: அய்யம்பேட்டையில் 55 மி.மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 19 Dec 2020 9:18 PM IST (Updated: 19 Dec 2020 9:18 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அய்யம்பேட்டையில் 55 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நிவர் புயல், புரெவி புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் நெற்பயிர்கள் சாய்ந்தன. குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் ஆங்காங்கே இடிந்து விழுந்தன.

இந்த பாதிப்பில் இருந்து மெல்ல, மெல்ல எழுந்து வருவதற்குள் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சூழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் மீண்டும் தொடர் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தஞ்சையில் மேகமூட்டமாகவே காணப்பட்டது.

அவ்வப்போது மழை தூறிக் கொண்டே இருந்தது. திடீரென விட்டு, விட்டு பலத்த மழையும் பெய்தது. இந்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலையில் நடந்து சென்றவர்கள் குடைபிடித்தபடியும், மழைகோட்டு அணிந்தபடியும் சென்றனர்.

இந்த மழையினால் சாலையோர கடை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தஞ்சை தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் சேறும், சகதியுமாக காணப்பட்டது. மக்களும் குறைந்தஅளவே வந்து சென்றனர். தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலை, நாகை சாலை உள்ளிட்ட முக்கியமான சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்த இடத்தில் குழிகள் இருக்கிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே சாய்ந்த நெற்பயிர்கள் இந்த மழைக்கு முளைக்க தொடங்கிவிட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

அய்யம்பேட்டை-55, மதுக்கூர்-40, திருவிடைமருதூர்-32, மஞ்சளாறு-31, அணைக்கரை-29, கும்பகோணம்-27, திருவையாறு-25, பாபநாசம்-22, வல்லம்-22, திருக்காட்டுப்பள்ளி-21, நெய்வாசல்தென்பாதி-20, பேராவூரணி-19 பூதலூர்-18, வெட்டிக்காடு-16, ஒரத்தநாடு-14, பட்டுக்கோட்டை-12, தஞ்சை-10, கல்லணை-10, அதிராம்பட்டினம்-9, ஈச்சன்விடுதி-7, குருங்குளம்-5.

Next Story