பிளாஸ்டிக் தடையால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் நிலுவை தொகையில் 50 சதவீதம் நிவாரணம் கலெக்டர் தகவல்


பிளாஸ்டிக் தடையால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் நிலுவை தொகையில் 50 சதவீதம் நிவாரணம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2020 7:03 AM IST (Updated: 20 Dec 2020 7:03 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் தடையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் நிலுவை தொகையில் 50 சதவீதம் நிவாரணமாக வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுற்றுப்புறச் சூழலை காக்கும் நோக்கில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் (பிளாஸ்டிக்) நெகிழிப் பொருட்கள்அரசால் தடை செய்யப்பட்டது. இந்த தடையின் விளைவாக பிளாஸ்டிக் பொருட்களான பேப்பர் கோப்பைகள், பாலித்தீன் பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தாளாலான தட்டுகள், அதிக அடர்வு கொண்ட பைகள், குறைந்த அடர்வு கொண்ட பாலிஎத்திலீன் பூசப்பட்ட பலகைகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்ற பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய நிறுவனங்களுக்கு நிவாரணம் அளித்திடும் வகையில் கடந்த 1-1-2019 அன்றைய நிலவரப்படி, நிலுவையில் உள்ள வங்கிக் கடன் தொகையில் 50 சதவீதம் நிவாரணமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக நிறுவனம் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் வரை (ஏற்கனவே வழங்கப்பட்ட முதலீட்டு மானியத்துடன் சேர்த்து) பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நிவாரணமாக வழங்கப்படும். இதனை நடைமுறைப்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பிளாஸ்டிக் தடையின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நிவாரணம் கோரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அடுத்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

அதுபோல், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடன் பெற்ற நிறுவனங்கள் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story