திருச்சியில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்: ஊழல் பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை வைத்திலிங்கம் எம்.பி. தாக்கு

ஊழல் பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை என்று திருச்சி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. தாக்கி பேசினார்.
திருச்சி,
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி வி.எஸ்.எம்.மகாலில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. மாநில துணை ஒருங்கிணைப்பாளரும், மண்டல பொறுப்பாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்றார். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி இளைஞர், இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி அமைப்பது, மகளிர் குழு பூத் அமைத்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்ட முடிவில் மண்டல பொறுப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
தொண்டர்கள் தான் வேர்கள்
எம்.ஜி.ஆரால் 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்சி (அ.தி.மு.க.) எத்தனையோ முறை பிளவுகளை சந்தித்தது. இருந்தாலும் மீண்டும் ஒன்றிணைந்து இரட்டை இலையை பெற்று 48 ஆண்டு காலத்தில், அதிகமாக ஆட்சி செய்த கட்சி அ.தி.மு.க. என்ற நிலையை எட்டியுள்ளது.
அதை நிரூபித்து காட்டியவர்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்தான். தொண்டர்கள் தான் ஆணி வேர் என்பதை மறந்துவிட முடியாது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் இன்றைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மிக சிறப்பாக ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார்கள். குடிமராமத்து திட்டம், நீர்மேலாண்மை, வேளாண்மைத்துறை என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தற்போது மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சாலை வசதி, மேம்பாலங்கள், அரசு பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீத ஒதுக்கீடு என நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். வேளாண் மண்டலம், விவசாயிகளுக்கு வேண்டிய நல்ல திட்டங்கள் இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.
தி.மு.க.வுக்கு தகுதி இல்லை
தி.மு.க.வில் மத்திய அமைச்சராக இருந்த ராசா, ஜெயலலிதாவை இழிவாக பேசி வருகிறார். அவரை பற்றி பேச தி.மு.க.வில் எவருக்கும் தகுதி இல்லை. கருணாநிதியே ஜெயலலிதாவை பார்த்து தைரியமிக்க பெண்மணி என்று சொன்னவர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராசா விடுதலையானதை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டுள்ளது.
அதில் இருந்து அவர் வெளியே வரட்டும். அதன்பின்னர் ஊழலை பற்றி பேசலாம். ஊழலை பற்றி பேச தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் அ.தி.மு.க. நூறாண்டு காலம் இருக்கும். ஆட்சியும் செய்யும். அதற்கு நாம் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.
அதுதான் இளைஞர், இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி 25 பேர், மகளிர் குழு 25 பேர் அமைப்பதாகும். அடுத்த வாரம் ஒவ்வொரு வார்டாக வந்து ஆய்வு செய்வோம். 20 பேர் கொண்ட பூத் கமிட்டி தனியாக அமைக்கப்பட உள்ளது.
2 மாதத்தில் தேர்தல் தேதி
ஒவ்வொரு வார்டிலும் இறந்தவர்கள், வெளிநாடு சென்றவர்கள், இரட்டை பதிவு வாக்காளர்களை சரி பார்க்க வேண்டும். இன்னும் தேர்தலுக்கு 2 மாதமே உள்ளது. அதாவது 2021 மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். அதற்குள் அனைத்து பணிகளையும் செய்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திருச்சியில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க.வை விட நாம் 1 சதவீத கூடுதல் வாக்குகள் பெற்றுதான் வெற்றி பெற்றுள்ளோம். இந்த தேர்தலில் சரியான வியூகத்தை அமைத்து நாம் பணியாற்றினால் சட்டசபை தேர்தலில் 10 முதல் 12 சதவீதம் வரை கூடுதல் வாக்குகளை பெறக்கூடிய நல்ல வாய்ப்பு இருக்கிறது.
ஆகவே, கழகத்தோழர்கள் கண் துஞ்சாது கடமை ஆற்றிட வேண்டும். இந்த பணிக்கு நாம் எடுத்து கொள்கிற நேரம் 10 நாட்கள்தான். இதில் சிறப்பாக பணியாற்றினால் திருச்சி மாநகரில் உள்ள 2 சட்டமன்ற தொகுதி, தெற்கு மாவட்டத்தில் 3, வடக்கு மாவட்டத்தில் 4 என மொத்தம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை இணைத்தால் 234 தொகுதியாக அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சியும் கைப்பற்றி தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வரலாற்று சாதனையை எய்திட முடியும்.
கருணாநிதி ஆட்சி?
தற்போது புதிதாக அரசியலுக்கு வருகிற சில நடிகர்கள் எல்லாம் கருத்து சொல்லிக்கொண்டே வருகிறார்கள். ஆனால், அவர்கள் சொல்கிற கருத்தெல்லாம் எம்.ஜி.ஆர்.போல நல்லாட்சி நடத்துவோம். ஏழை, எளியோருக்கு எம்.ஜி.ஆர். எப்படி நல்ல திட்டங்களை கொண்டு வந்தாரோ அதுபோல திட்டங்களை கொண்டு வருவதாக ஒரு நடிகர் (கமல்ஹாசன்) சொல்கிறார். இன்னொரு நடிகர் (ரஜினிகாந்த்) இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவரும் ஜெயலிதாவை இரும்பு பெண்மணி என்றும், எம்.ஜி.ஆர். ஆட்சி அமையும் என்றுதான் சொல்கிறார். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் பலர் அண்ணா, எம்.ஜி.ஆர். அல்லது ஜெயலலிதாபோல ஆட்சியைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், கருணாநிதிபோல ஆட்சி செய்வோம் என்றோ, கனிமொழிபோல ஒரு பெண்ணை பார்த்ததில்லை என்று ஏன் சொல்லவில்லை?. அ.தி.மு.க.வில் தான் சிறப்பான தலைவர்கள் ஆட்சி செய்து வருகிறார்கள்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதியையும் அ.தி.மு.க. வென்று காட்டும்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து 9 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டி.ரெத்தினவேல், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜகுமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பத்மநாபன், திருச்சி மாநகர் மாவட்ட கழக அவை தலைவர் அய்யப்பன், துணை செயலாளர் வனிதா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜோசப்ஜெரால்டு, இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், ஏர்போர்ட் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி, ஆவின் சேர்மன் கார்த்திகேயன் மற்றும் ஜவர்கர்லால் நேரு உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story