கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது எப்படி? - கைதான வாலிபர் வாக்குமூலம்


கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது எப்படி? - கைதான வாலிபர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 21 Dec 2020 6:39 AM IST (Updated: 21 Dec 2020 6:39 AM IST)
t-max-icont-min-icon

வளசரவாக்கத்தில் கள்ள நோட்டு மாற்ற முயன்றதாக கைதான வாலிபர், கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது எப்படி? என்பது குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு மாற்ற முயன்ற புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இலியாஸ் (வயது 32) கைது செய்யப்பட்டார். கொரோனா காலத்தில் போதிய வருமானம் இல்லாததால், ‘யூடியூப்பை’ பார்த்து கள்ளநோட்டு தயாரிக்க கற்றுக்கொண்டதாகவும், ஆன்லைன் மூலம் பிரத்யேகமாக ஜெராக்ஸ் எந்திரம், பேப்பர்களை வாங்கி, 2000 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத் ததும் தெரியவந்தது.

ஆனால் அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர், கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி கள்ளநோட்டு அச்சடித்ததாக நாடமாடியதும், நீண்டநாட்களாக அவர் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது எப்படி? என அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

ஆரம்பத்தில் நான் 100 ரூபாய் கள்ளநோட்டை அச்சடித்தேன். இவ்வாறு சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை மாற்றி, கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளேன். ஆனால் யாரிடமும் சிக்காததால் அடுத்தகட்டமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அச்சடித்து புழக்கத்தில் விட தொடங்கினேன்.

குறிப்பாக மளிகை கடைகளில் பெண்கள் கல்லாப்பெட்டியில் இருக்கும் நேரத்தில் சென்று மாற்றுவேன். அவர்களுக்கு கள்ளநோட்டு பற்றி தெரியாததால் பொருட்கள் வாங்கியும், கட்டுமான பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க சில்லறை வேண்டும் என கூறியும் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்றினேன். ஆனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் ஒரே சீரியல் எண் இருப்பதை வைத்து என்னை கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைதான இலியாஸ் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story