புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பையில் போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மும்பை,
சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் சிக்க வைத்து விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு அவர்கள் நடத்தி வருகிற போராட்டம் நேற்று 27வது நாளை அடைந்தது. வாட்டி வதைக்கும் குளிருக்கு மத்தியிலும் தங்கள் போராட்டத்தை அவர்கள் தொடர்கின்றனர்.
மத்திய அரசு அவர்களுடன் 5 சுற்று பேச்சு நடத்தியும் முடிவில்லை. இரு தரப்பினரும் பிடிவாதமாக இருப்பதால் போராட்டம் தொடர்கதையாய் நீளுகிறது.
இந்தநிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று மும்பை புறநகர் கலெக்டர் அலுவலகம் அருகே மராட்டியத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு மராட்டிய மந்திரி பச்சு கடுவின் 'பிரகார்' அமைப்பும் ஆதரவு அளித்தது.
இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். புதிய வேளாண் சட்டங்கள் கார்பரேட் நிறுவனங்களுக்கு தான் சாதகமாக இருக்குமே தவிர, விவசாயிகளுக்கு அல்ல என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தால் மும்பை புறநகர் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மராட்டிய விவசாய அமைப்பை சேர்ந்த பலர் போராட்டத்துக்காக ஏற்கனவே டெல்லி சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story