நெல்லை மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; கலெக்டர் விஷ்ணு அறிவுறுத்தல்

நெல்லை மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணு அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பொருளாதார கணக்கெடுப்பு
நாடு முழுவதும் 7-வது பொருளாதார கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் 9-ந்் தேதி அன்று தமிழக கவர்னரால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் மேற்பார்வையாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு 2 கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த கணக்கெடுக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் நடந்து வருகிறது.
இக்கணக்கெடுக்கும் பணி என்பது பல்வேறுபட்ட உற்பத்தி, வினியோகம், விற்பனை மற்றும் சேவை நோக்கத்தோடு செய்யும் அனைத்து வகையான பதிவு சம்பந்தப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வணிக நிறுவனங்களைப் பற்றிய கணக்கெடுக்கும் பணியாகும்.
5 ஆண்டுக்கு ஒருமுறை
கணக்கெடுக்கும் பணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த கணக்கெடுப்பில் குடும்ப தலைவர் பெயர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, வயது, இனம், சமூகப் பிரிவு கைபேசி எண், செய்யும் தொழில், சுய தொழில் முதலீடுகள், வேலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை பான் எண் மற்றும் ஜி.எஸ்.டி. எண் போன்ற விவரங்கள் சேர்க்கப்படுகிறது.
இக்கணக்கெடுப்பு விவரங்கள் முற்றிலும் அரசின் பொருளாதார திட்டமிடுவதற்கு பயன்படுத்தப்பட உள்ளன. இந்த கணக்கெடுப்பை தேசிய புள்ளியியல் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மேற்பார்வையில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையம் என்ற இ-கவர்னன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. எனவே கணக்கெடுப்புக்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் தேவையான புள்ளி விவரங்களை வழங்கி நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வையார் விருது
இதேபோல் அவர் வௌியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த பெண்களுக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (2020-2021) அவ்வையார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருது உலக மகளிர் தின விழா கொண்டாடும் நாளன்று வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். விருதுபெற விண்ணப்பிப்பவர்கள் அதற்கான உரிய படிவத்தினை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
விதிமுறைகள்
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கிறவர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும். விண்ணப்பத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 3 நகல்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்கான சிறப்பாக சேவை புரிந்த விவரம் ஒரு பக்க அளவில் எழுதி இருக்க வேண்டும். விண்ணப்பத்தில் இடம்பெற்றுள்ள ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story