சேலத்தில், பிரபல ரவுடியை கொலை செய்தது ஏன்? கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

சேலத்தில் பிரபல ரவுடி செல்லதுரையை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதானவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சேலம்,
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 34). பிரபல ரவுடியான இவரை கிச்சிப்பாளையத்தில் கடந்த 22-ந் தேதி மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
இந்த கொலை குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக பழனி சாமி, ஜெயக்குமார், சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தேடப்பட்டு வந்த ஜான் என்கிற ஜானகிராமன் உள்பட 7 பேர் கரூர் கோர்ட்டிலும், சாரதி உள்பட 8 பேர் நாமக்கல் கோர்ட்டிலும், சிலம்பரசன் உள்பட 3 பேர் ஓமலூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.
கரூர் கோர்ட்டில் சரண் அடைந்த ராஜ் மணிகண்டன், விக்னேஷ் உள்ளிட்ட 7 பேரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் 7 பேரிடம் நேற்று விசாரணை நடத்தினர். இதில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
கைது செய்யப்பட்டு உள்ள சதீஷ், கொலையான செல்லதுரையின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இந்தநிலையில் செல்லதுரையின் உறவினர் பெண்ணை சதீஷ் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இது செல்லதுரைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சதீஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் செல்லதுரை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களை தாக்கி உள்ளார். இதனால் செல்லதுரை மீது சதீசுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இதனால் சதீஷ், செல்லதுரைக்கு எதிரியான ஜான் கோஷ்டியுடன் நட்பு வைத்துக் கொண்டு செல்லதுரையை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சதீஷ் தனது கோஷ்டியினருடன் சேர்ந்து சம்பவத்தன்று காரில் வந்த செல்லதுரையை கொலை செய்துள்ளார்.
இவ்வாறு கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story