சேலம் மாநகராட்சியில் நடந்த சிறப்பு முகாமில் 295 விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு - ரூ.1½ கோடி வரி வசூல்


சேலம் மாநகராட்சியில் நடந்த சிறப்பு முகாமில் 295 விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு - ரூ.1½ கோடி வரி வசூல்
x
தினத்தந்தி 3 Jan 2021 10:22 PM IST (Updated: 3 Jan 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சியில் நடந்த சிறப்பு முகாமில் 295 விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், ரூ.1½ கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அனைத்து சேவைகளுக்கும் விண்ணப்பிக்க ஏதுவாக ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாம்களில் சொத்துவரி, குடிநீர் வரி, பெயர் மாற்றம் செய்வதற்காக 408 விண்ணப்பங்களும், புதிய சொத்து வரி மற்றும் காலி நில வரி விதித்தலுக்காக 583 விண்ணப்பங்களும், புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்காக 286 விண்ணப்பங்களும், பாதாள சாக்கடை இணைப்புக்காக 57 விண்ணப்பங்களும், மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் கட்டுமான வரைபட அனுமதிக்காக 56 விண்ணப்பங்களும் மற்றும் இதர இனங்களுக்கான 28 விண்ணப்பங்களும் என மொத்தம் 1,418 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த 295 விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உரிய ஆணைகளும் அதிகாரிகளால் வழங்கப்பட்டது. மீதமுள்ள விண்ணப்பங்கள் மீது 7 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு உரிய ஆணைகளை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

இந்த சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்ப படிவங்கள் மற்றும் பதிவு கட்டணமாக ரூ.92 ஆயிரத்து 310-ம், சொத்து வரியாக ரூ.19 லட்சத்து 95 ஆயிரத்து 594-ம், குடிநீர் கட்டணமாக ரூ.7 லட்சத்து 65 ஆயிரத்து 783-ம், தொழில் வரியாக ரூ.14 ஆயிரத்து 118-ம், பாதாள சாக்கடை திட்ட வைப்புத்தொகையாக ரூ.15 லட்சத்து 8 ஆயிரத்து 37-ம், மனை பிரிவு வரன்முறை கட்டணமாக ரூ.35 லட்சத்து 80 ஆயிரத்து 535-ம், குடிநீர் வைப்புத்தொகை மற்றும் சாலை பராமரிப்பு கட்டணமாக ரூ.42 லட்சத்து 43 ஆயிரத்து 134 உள்பட மொத்தம் ரூ.1 கோடியே 58 லட்சத்து 84 ஆயிரத்து 680 வசூலிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் சொத்து வரி, பெயர் மாறுதலுக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த முகாம்களில் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் செல்வராஜ், சரவணன், ராம்மோகன், ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story