காசர்கோடு அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: கர்நாடகத்தை சேர்ந்த 8 பேர் நசுங்கி சாவு

திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது காசர்கோடு அருகே தனியார் பஸ் கவிழ்ந்து கர்நாடகத்தை சேர்ந்த 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
மங்களூரு,
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் காரிகே பகுதியில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா ஈஸ்வரமங்கலம் பகுதியை சேர்ந்த 65 பேர் தனியார் பஸ்சில் காரிகே நோக்கி புறப்பட்டு சென்றனர். அந்த பஸ் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பானத்தூர் வழியாக காரிகே சென்று கொண்டிருந்தது.
அந்த தனியார் பஸ் நேற்று காலை 11.30 மணி அளவில் பானத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் அதிவேகமாக சென்றதாக தெரிகிறது. அந்த நேரத்தில் அங்குள்ள ஒரு வளைவில் பஸ்சை டிரைவர் திருப்ப முயன்றார். ஆனால் பஸ் அதிவேகமாக சென்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
பின்னர் சாலையின் அருகே உள்ள ஒரு வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் பஸ்சுக்குள் இருந்த அனைவரும் அய்யோ... அம்மா... என்று அலறினார்கள். இது குறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிச்சென்று, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அத்துடன் இது குறித்து தகவல் அறிந்த காசர்கோடு போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பஸ்சுக்குள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பஸ்சுக்குள் இருந்த ஸ்ரேயாஸ் (வயது 13), ஆதர்ஷ் (14), ஜெயலட்சுமி (45), ரவிச்சந்திரன் (40), ராஜேஸ் (49), சுமதி (50) மற்றும் இருவர் என்று மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அவர்களை மீட்டு அருகே உள்ள வெல்லாரக்குண்டு தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதுபோன்று மேல் சிகிச்சைக்காக 6 பேர் கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சாவு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கேரள வீட்டுவசதி வாரிய மந்திரி சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள். அதுபோன்று முதல்-மந்திரி பினராயி விஜயன், கலெக்டர் சஜித்பாபுவுக்கு தொடர்பு கொண்டு உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட துரிதப்படுத்தினார். இந்த விபத்தில் சாலை ஓரத்தில் இருந்த வீட்டில் யாரும் இல்லை. மேலும் விபத்து தொடர்பான அறிக்கையை அளிக்க போக்குவரத்துத்துறை மந்திரி ஏ.கே.சசீந்திரன் மற்றும் காசர்கோடு கலெக்டர் ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இது தொடர்பாக போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story