திருநின்றவூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி


திருநின்றவூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 4 Jan 2021 7:54 AM IST (Updated: 4 Jan 2021 7:54 AM IST)
t-max-icont-min-icon

திருநின்றவூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

ஆவடி,

திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் அடுத்த புலியூர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 20). இவர் திருநின்றவூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சந்தியா (18) மற்றும் சத்தியபிரியா (18) இருவரும் திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தனர்.

நேற்று காலை வெங்கடேசன், சந்தியா மற்றும் சத்தியபிரியா இருவரையும் தனது மோட்டார் சைக்கிளில் சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு அழைத்துச் சென்றார். திருநின்றவூர் போலீஸ் நிலையம் எதிரே திருநின்றவூர் - பெரியபாளையம் சாலையில் திரும்பும்போது பெரியபாளையம் நோக்கி சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க லாரியை அதன் டிரைவர் திருப்பினார். இதில் லாரி, வெங்கடேசன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

2 பேர் பலி

இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது வெங்கடேசன் மற்றும் சத்தியபிரியா இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சந்தியாவுக்கு கால் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. சந்தியாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வெங்கடேசன் மற்றும் சத்தியபிரியா இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story