அரசு-தனியார் பங்களிப்பில் பெங்களூருவில் கர்நாடக விஞ்ஞான நகரம் - எடியூரப்பா தலைமையில் நடந்த திட்டக்குழு கூட்டத்தில் முடிவு


அரசு-தனியார் பங்களிப்பில் பெங்களூருவில் கர்நாடக விஞ்ஞான நகரம் - எடியூரப்பா தலைமையில் நடந்த திட்டக்குழு கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 9 Jan 2021 12:37 AM GMT (Updated: 9 Jan 2021 12:37 AM GMT)

அரசு-தனியார் பங்களிப்பில் பெங்களூருவில் கர்நாடக விஞ்ஞான நகரம் அமைக்க திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக அரசின் திட்டக்குழு கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் திட்டக்குழு துணைத்தலைவர் பி.ஜே.புட்டசாமி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

17 முக்கியமான திட்டங்களை செயல்படுத்தியதில் கர்நாடகம் தேசிய அளவில் 6-வது இடத்தில் உள்ளது. வறுமை ஒழிப்பு, பசி ஒழிப்பு, பாலின சமத்துவம், தொழில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் இந்த நோக்கங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டும். இதற்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் முழுமையாக சம்பந்தப்பட்ட மக்களை போய் சேர வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில், கர்நாடக திட்டக்குழுவின் பெயரை கர்நாடக மாநில கொள்கை மற்றும் திட்ட குழு என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஆலோசனை குழுக்களை அமைத்தல், இந்த குழுவுக்கு கூடுதலாக 3 அதிகாரிகளை நியமனம் செய்வது, வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தாலுகாக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிப்பது, அரசின் திட்ட பயன்கள் ஏழை மக்களுக்கு கிடைக்க ஒற்றைசாளர முறையை கொண்டுவருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களை மேம்படுத்த தரமான திட்டங்களை அமல்படுத்துவது, ஆதிவாசி மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்குவது, பெங்களூருவில் கர்நாடக விஞ்ஞான நகரம் அரசு-தனியார் பங்களிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு சதவீதம் ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும்.

விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் மத்திய திட்டங்களுடன் மாநில திட்டங்களை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு-தனியார் பங்களிப்பில் கர்நாடகத்தில் தொழிற்பயிற்சி பல்கலைக்கழகம் அமைத்தல், அனைத்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டி வழங்குவது, அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான ஒரு ஸ்மார்ட் பள்ளியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ரவிக்குமார், திட்டத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story