தொடர்மழை நிரம்பி வரும் அணைகள்-கண்மாய்கள் - பயிர்கள் சேதம்


தொடர்மழை நிரம்பி வரும் அணைகள்-கண்மாய்கள் - பயிர்கள் சேதம்
x
தினத்தந்தி 9 Jan 2021 6:03 PM IST (Updated: 9 Jan 2021 6:03 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

சேத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் 36 கன அடி கொள்ளளவு கொண்ட தேவதானம் சாஸ்தா கோவில் அணை நேற்று முன்தினம் இரவு நிரம்பியது.

இதேபோல் தேவதானம் நகர குளம், வாழவந்தான், முத்துசாமிபுரம், முகவூர், சேத்தூர் பிராக்குடி, கடைப்பொடி ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்களும் நிரம்பின.

தற்போது சேத்தூர் தொப்பையன் குளம், கொல்லங்கொண்டான் பெரியகுளம் கண்மாய் பகுதிக்கு இந்த தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் தற்போது சேத்தூர், தேவதானம், சொக்கநாதன்புத்தூர், சுந்தரராஜபுரம், புத்தூர், சோலைசேரி, முகவூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எண்ணற்ற பேர் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

இதில் புரட்டாசி மாதம் நெற்பயிரை நடவு செய்தவர்களுக்கு இன்னும் 2 வாரத்தில் அறுவடை செய்யும் காலம் ஆகும்.

அறுவடை நெருங்கும் நேரத்தில் பெய்த மழையினால் நெற்பயிர்கள் மூழ்கி சேதமானது.

ஐப்பசி மாதம் நடவு செய்த விவசாயிகளுக்கு தற்போது பெய்து வரும் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆதலால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சாத்தூர், ரெங்கப்பநாயக்கன்பட்டி, ஓடைப்பட்டி, பெத்துரெட்டிபட்டி, கரிசல்பட்டி, என்.சுப்பையாபுரம், முள்ளிச் செவல், உப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது.

இங்கு பருத்தி, கம்பு, சோளம், மக்காச்சோளம் போன்ற பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

இந்தநிலையில் இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழை இல்லை.

ஆதலால் மண்ணில் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும் என்று கருதி விவசாயிகள் குறுகியகால பயிரான பாசிப்பயறு, உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளை பயிரிட்டனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

எனவே உளுந்து, பாசி பயறு சாகுபடி செய்த வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் செடிகள் அழுக தொடங்கி விட்டன.

இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ெதாடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது பயிரிடப்பட்டுள்ள உளுந்து, பாசி பயறு ஆகியவை அழுக தொடங்கி விட்டன.

கடன் வாங்கி சாகுபடி செய்த நாங்கள் அறுவடைக்கு பிறகு அந்த கடனை அடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் தற்போது பெய்த மழையினால் உளுந்து, பாசி பயறு செடிகள் அழுக தொடங்கி விட்டன.

எனவே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாப்பட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர், சேதுநாராயணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழையினால் கூமாப்பட்டி ரகுமத் நகர் பகுதியில் உள்ள நெற்பயிர்கள் மூழ்கின.

Next Story