பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு வகைகளை சாப்பிட்ட அக்காள், தம்பி சாவு - செங்கம் அருகே பரிதாபம்

செங்கம் அருகே பொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு வகைகளை சாப்பிட்ட அக்காள்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
செங்கம்,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 29), கூலித்தொழிலாளி. இவருக்கு பாஞ்சாலை (25) என்ற மனைவி, ஆஷானி (4) என்ற மகளும், ஹரி (3) என்ற மகனும் உண்டு.
பொங்கல் பண்டிகையையொட்டி பழனி தனது குழந்தைகளுக்கு கடைவீதியில் விற்ற இனிப்பு வகைகளை வாங்கி வந்து கொடுத்துள்ளார். அவர் வாங்கி வந்த இனிப்பு வகைகளை இரு குழந்தைகளும் சாப்பிட்டுள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களின் இரு குழந்தைகளையும் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆஷானி பரிதாபமாக உயிரிழந்தாள்.
கவலைக்கிடமாக இருந்த ஹரியை மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹரி பரிதாபமாக உயிரிழந்தான். இரு குழந்தைகளும் உயிரிழந்ததைப் பார்த்து பெற்றோரும், கிராம மக்களும் கதறி அழுதனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, தரமற்ற பழைய இனிப்பு வகைகளை குழந்தைகள் சாப்பிட்டதால் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். ஆஷானி மற்றும் ஹரியின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டன. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story