சிவகங்கை மாவட்டத்தில், 4 சட்டமன்ற தொகுதியில் இறுதி பட்டியலில் 11 லட்சத்து 81 ஆயிரத்து 877 வாக்காளர்கள் - ஆண்களைவிட 20 ஆயிரத்து 360 பேர் பெண்கள் அதிகம்


சிவகங்கை மாவட்டத்தில், 4 சட்டமன்ற தொகுதியில் இறுதி பட்டியலில் 11 லட்சத்து 81 ஆயிரத்து 877 வாக்காளர்கள் - ஆண்களைவிட 20 ஆயிரத்து 360 பேர் பெண்கள் அதிகம்
x
தினத்தந்தி 21 Jan 2021 7:45 PM IST (Updated: 21 Jan 2021 7:45 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியில் இறுதி பட்டியலில் 11 லட்சத்து 81 ஆயிரத்து 877 பேர் மொத்த வாக்காளர்கள் ஆவார்கள். இதில் ஆண்களை விட 20 ஆயிரத்து 360 பேர் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் 2021-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி மாநில தேர்தல் ஆணையம் நேற்று வாக்காளர் இறுதிப்பட்டியலை அறிவித்தது. இதை தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

அந்த வகையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் பார்ைவயாளர் ஆப்ரஹாம், மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, வக்கீல் அழகர்சாமி, பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் பாலமுருகன், நகர்தலைவர் தனசேகரன், தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் பெரோஸ்காந்தி, காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் கணேசன், தே.மு.தி.க. மாவட்டஅவை தலைவர் முத்துராமு, நகரசெயலாளர் தர்மராஜ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன் (சிவகங்கை), சுரேந்திரன், (தேவகோட்டை) மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொது) சிந்து, தாசில்தார்கள் கந்தசாமி, (தோ்தல்) உள்பட பலர் கொண்டனர்.

பின்னர் வாக்காளர் பட்டியலை தேர்தல் பார்வையாளர் மற்றும் கலெக்டர் வெளியிட அதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்று கொண்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்ந்து 11 லட்சத்து 81 ஆயிரத்து 877 பேர் மொத்த வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 722 பேர் ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து ஆயிரத்து 82 பேர் பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 73 பேர் உள்ளனர். காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 345 வாக்குச்சாவடிகளும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 334 வாக்குச்சாவடிகளும், சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 348 வாக்குச்சாவடிகளும், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 321 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,348 வாக்குச்சாவடிகள் உள்ளன.

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை ஆண் வாக்காளர்களை விட 20 ஆயிரத்து 360 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story