சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கையில் தட்டு ஏந்தி போராட்டம்

மதிய உணவு வழங்காததால் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கையில் தட்டு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அரசு கல்லூரிக்கு இணையான கல்வி கட்டணத்தை வசூலிக்க கோரியும், தனியார் மருத்துவக்கல்லூரிகளை விட 30 சதவீதம் கூடுதலாக கல்வி கட்டணத்தை வசூலிப்பதை கண்டித்தும் நேற்று முன்தினம் 43-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவ-மாணவிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக பல்கலைக்கழக விடுதியில் இருந்து வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவ-மாணவிகள் தாமரை விடுதியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், மீண்டும் விடுதியில் தங்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி விடுதியில் தங்கி இருந்த மாணவ-மாணவிகளுக்கு நேற்று காலையில் உணவு வழங்கப்பட்டது. அதன்பிறகு மாணவ-மாணவிகள் 44-வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதன்காரணமாகவும், மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றுவதற்காகவும் மதிய உணவு வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் தாங்கள் ஏற்கனவே கட்டிய உணவு கட்டண ரசீதுடனும், காலி தட்டுகளை கையில் ஏந்தியபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தில் இருந்து யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் மாணவர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story