மதுரையில் டெங்கு அறிகுறியுடன் சிறுவன் பலி - 45 பேருக்கு சிகிச்சை

மதுரையில் டெங்கு அறிகுறியுடன் சிறுவன் பலியானான். 45 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் டெங்கு பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் இறந்ததும் உண்டு. இந்தநிலையில், கடந்த 21 நாட்களில் மதுரை நகரில் 20 பேர், புறநகரில் 25 பேர் என மொத்தம் 45 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே, மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த சிறுவன் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அப்போது அவனுக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில், சிகிச்சையில் இருந்த அந்த சிறுவன் திடீரென இறந்துபோனான். இதுபோல், அந்த சிறுவனின் சகோதரனுக்கும் டெங்கு அறிகுறி இருந்ததை தொடர்ந்து அந்த சிறுவனும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மதுரையில் டெங்கு காய்ச்சல் மெல்ல மெல்ல பரவி வருகிறது. கடந்த வருடத்தை ஒப்பிடும் போது டெங்கு பாதிப்பு குறைவு தான். இருந்தாலும், அனைத்து விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தற்போது டெங்கு அறிகுறியுடன் இறந்த சிறுவன் வசித்த பகுதியிலும் டெங்கு தடுப்பு பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட் டு உள்ளது. எனவே அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அப்போது தான் டெங்கு பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளமுடியும் என்றனர்.
Related Tags :
Next Story