நீச்சல் பழகியபோது விபரீதம்: குளத்தில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் பலி


பலியான ராதா, சரஸ்வதி, பவ்யா.
x
பலியான ராதா, சரஸ்வதி, பவ்யா.
தினத்தந்தி 25 Jan 2021 5:09 AM GMT (Updated: 25 Jan 2021 5:09 AM GMT)

சாணார்பட்டி அருகே, நீச்சல் பழகியபோது குளத்தில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

கூட்டுறவு விற்பனையாளர்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள காவேரிசெட்டியப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். அவருடைய மனைவி ராதா (வயது 38). இவர், திண்டுக்கல் அபிராமி கூட்டுறவு பண்டகசாலையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் ராதா தனது மகள் பவ்யா (13) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகள் சரஸ்வதி (13 ஆகியோருடன் நேற்று அப்பகுதியில் உள்ள செங்குளத்துக்கு குளிக்க சென்றார்.

சிறுமிகள் இருவரும் குளத்தில் குளித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு ராதா நீச்சல் கற்று கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ராதா ஈடுபட்டார். இதில் அவரும் தண்ணீரில் மூழ்கி விட்டார்.

3 பேர் பலி
குளத்தில் மூழ்கிய 3 பேரும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்ததை, கரையோரத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன் பார்த்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவன், காவேரிசெட்டியப்பட்டி கிராம மக்களுக்கு சென்று தகவல் தெரிவித்தான்.

இதனையடுத்து கிராம மக்கள் குளத்துக்கு விரைந்து சென்று 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணிநேர தேடுதலுக்கு பிறகு 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். அதாவது தண்ணீரில் மூழ்கிய 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர்.

ராட்சத பள்ளங்கள்
இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர்.மேலும் சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட 3 பேர் மூழ்கி பலியான சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், செங்குளத்தில் இரவு, பகலாக பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டர்களில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் குளத்துக்குள் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் சிக்கியே 3 பேரும் உயிரிழந்து விட்டனர் என்று குற்றம்சாட்டினர்.

Next Story