திருப்போரூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்போரூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்போரூர்,
திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் மாலா. இவரது மகள் சுமதி (வயது 28). இவருக்கும் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர், துலுக்காணத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த வெல்டிங் கடை ஊழியர் சீனிவாசன் என்ற ஏழுமலை என்பவருக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது சுமதிக்கு, 10 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிள் போன்றவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. திருமணம் ஆனது முதல், ஏழுமலையும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. சமீபத்தில், சொந்தமாக வெல்டிங் கடை வைக்க வேண்டும் என கூறி, அதற்கான பணத்தை வாங்கி வரும்படி சுமதியை, அவரது தாய் வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தாய் வீட்டுக்கு சென்ற சுமதி கடந்த 2 நாட்களாக மன வருத்தத்துடன் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். கூடுதல் வரதட்சணை கேட்பது குறித்து தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை அறையில் தூங்க சென்ற சுமதி, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த தாய் மாலா, கதவை திறக்க முயன்றபோது, உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு இருந்தது. இதனால் அவா் அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினா் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுமதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதற்கிடையில், சுமதியின் தாய் மாலா கொடுத்த புகாரின்படி சுமதியின் மாமனார் அருள்தாஸ், மாமியார் முளவம்மாள், மைத்துனர் முகேஷ், நாத்தனார் முத்துலட்சுமி, ஏழுமலை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story