பெண் விரிவுரையாளரை தாக்கி 5 பவுன் சங்கிலி பறிப்பு

திருமயம் அருகே பெண் விரிவுரையாளரை தாக்கி சங்கிலியை பறித்த மர்ம நபர்கள், மேலும் 2 பெண்களிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமயம் ,
சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மகள் அபிராமி (வயது 26). இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லேனா விலக்கில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் காரைக்குடி-திருச்சி பைபாஸ் சாலையில் வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு முன்னால் கடியாபட்டி சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த மோதிலால் நேரு மனைவி ராஜேஸ்வரி (42), அதே பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி ஆகிய இருவரும் ஒரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அபிராமி சென்ற ஸ்கூட்டரின் மீது மோதி அவரை கீழே தள்ளியதுடன் அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.
மேலும் 2 பெண்கள்
பின்னர், முன்னே சென்று கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் மகேஸ்வரியையும் இதேபோல மோட்டார் சைக்கிளால் இடித்து கீழே தள்ளி தாக்கி தங்க சங்கிலிகளை பறிக்க முயன்றனர்.
ஆனால், சுதாரித்துக் கொண்ட அவர்கள் இருவரும் தங்க சங்கிலிகளை கைகளால் இறுக பிடித்துக் கொண்டனர். இதனால், அவர்களிடம் மர்ம நபர்களால் சங்கிலிகளை பறிக்க முடியாமல் தப்பி சென்று விட்டனர்.
மர்ம நபர்கள் தாக்கியதில் அபிராமி, ராஜேஸ்வரி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகேஸ்வரிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை திருமயம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story