எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் மறியல்

பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கக்கோரி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கக்கோரி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாதாள சாக்கடை பணி
காரைக்குடியில் ரூ.125 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால் காரைக்குடியில் பெரும்பாலான இடங்களில் சாலைகள் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு பயனற்றதாக மாறி உள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தி வந்தார்.அப்போது அதிகாரிகள் எம்.எல்.ஏ.விடம் பணிகளை விரைந்து முடித்து விடுவதாக கூறினாலும் பிரச்சினைகள் அப்படியே தொடர்ந்த வண்ணம் இருந்தன.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. பாதாள சாக்கடை திட்ட பணி குறித்து தேவகோட்டை ரஸ்தா பகுதியில் ஆய்வு பணியை மேற்கொண்டார்.
தேவகோட்டை ரஸ்தா பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை அவர் ஆய்வு செய்தபோது அங்கு பணிகள் முடக்கப்பட்டு பல மாதங்களாக கிடப்பில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி எம்.எல்.ஏ அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது அதிகாரிகள் சரிவர பதில் அளிக்கவில்லை. நகரில் பல இடங்களில் சாலை சீரமைக்காமல் அப்படியே இருந்தன.
இதை தொடர்ந்து பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரி கே.ஆர் ராமசாமி எம்.எல்.ஏ. காரைக்குடி அண்ணாசிலை அருகே தனிநபராக சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். எம்.எல்.ஏ. சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் மேற்கொள்வதை கேள்விப்பட்ட காங்கிரசாரும், பொதுமக்களும அங்கு திரண்டனர். தர்ணா போராட்டம் சாலை மறியலானது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் போக்குவரத்தை மாற்று வழியில் திருப்பி விட்டனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறையினர், பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்ளும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய துறையினர், போலீசார், நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது எம்.எல்.ஏ., ஒப்பந்ததாரர் பணிகளை முடிக்க காலதாமதம் செய்கிறார். அவருக்கு உறுதுணையாக அதிகாரிகள் இருப்பது வேதனை அளிக்கிறது. பணிகள் முடிக்காததால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். அதனால் தான் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என குறிப்பிட்டார்.
இதையடுத்து ஒரு மாத காலத்திற்குள் பாதாள சாக்கடை பணிகளை முடித்து தருவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வ எழுதி கொடுத்ததை தொடர்ந்து எம்.எல்.ஏ. போராட்டத்ைத வாபஸ் பெற்று கொண்டார். காலை 10.50 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
காங்கிரசாரின் இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story