தி.மு.க. ஆட்சிக் வந்ததும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் உளுந்தூர்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சிக் வந்ததும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் உளுந்தூர்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உளுந்தூர்பேட்டை,
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்கிற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலை சந்திப்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
அவசர அவசரமாக பூட்டுகிறார்கள்
நான் உங்களையெல்லாம் சந்தித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம் என வந்தேன். ஆனால் இந்த மக்கள் கூட்டத்தை பார்த்ததும் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரவேண்டும் என நீங்கள் முடிவெடுத்து விட்டீர்கள் என்பது எனக்கு தெரிந்து விட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வரவேண்டும் என தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு தான் மக்கள் வாக்களித்தார்கள். அவர் இறந்த பிறகு சசிகலாவின் காலில் விழுந்து தான் முதல்-அமைச்சர் ஆனார். இதற்கான ஆதாரம் என்னிடமும், மக்கள் அனைவரிடமும் உள்ளது. தற்போது சிறையில் இருந்து சசிகலா வெளியே வருகிறார் என்றதும் அவருக்கு பயந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தை அவசர அவசரமாக பூட்டுகிறார்கள்.
3-வது பெரிய கட்சி
நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களின் மீது மிகப்பெரிய கோபத்தில் உள்ளார். ஏனென்றால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுக்க நரேந்திர மோடியின் அலை வீசியது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பா.ஜ.க.வால் ஒரு சீட்டு கூட வாங்க முடியவில்லை. இதனால் இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாக தற்போது தி.மு.க. உள்ளது.
டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். பா.ஜ.க. கூட்டணியில் இருந்த கட்சிகள் கூட இந்த சட்டத்தை எதிர்த்தார்கள். கூட்டணியில் இருந்து விலகினார்கள். ஆனால் அ.தி.மு.க.வினர் மட்டும் ஆதரித்தார்கள். மோடி விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார். எல்லாவற்றையும் தனியாருக்கு விற்பது மத்திய அரசு. அதை ஆதரிப்பது மாநில அரசு.
முற்றுப்புள்ளி வைக்கப்படும்
மறைந்த முதல்-அமைச்சர்களான கருணாநிதியோ, ஜெயலலிதாவோ நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போதுள்ள அரசு நீட் தேர்வை ஆதரித்தது. நீட் தேர்வுக்கு பயந்து தமிழகத்தில் இதுவரை 14 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு தி.மு.க. ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதேபோல் கல்விக் கடனும் ரத்து செய்யப்படும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனவுடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சரியான விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வருவோம்.
தி.மு.க. தான் போட்டியிடும்
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தான் போட்டியிடும், கூட்டணி கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் வழங்க மாட்டார் என நம்புகிறேன். எனவே தி.மு.க. தொண்டர்கள் அரும்பாடுபட்டு உளுந்தூர்பேட்டையில் வெற்றி பெற செய்ய வேண்டும். இன்னும் 2½ மாதத்தில் தேர்தல் வர உள்ளது. இதில் மக்களாகிய நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அ.தி.மு.க.வை விரட்டி அடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ, நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story