வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுவையில் சாலை மறியல்; விவசாயிகள் கைது

வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுவையில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுவையில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து விவசாயிகள் சங்கத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவின. இதற்கிடையே டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. டிராக்டர் பேரணி மற்றும் போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நாடு முழுவதும் நேற்று சாலை மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுவை விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் மகா சங்கம் சார்பில் அண்ணா சிலை அருகில் நேற்று காலை மறியல் போராட்டம் நடந்தது.
விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன், அகில இந்திய விவசாயிகள் மகாசங்க புதுவை தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
சாலை மறியலில் விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ரவி, துணை பொதுச்செயலாளர் ராஜா, பொருளாளர் கலியமூர்த்தி, செயலாளர் பெருமாள், மகா சங்க செயலாளர் ராஜராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் சிறிதுநேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story