தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நூறு நாளில் நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து; உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நூறு நாளில் தனி அமைச்சகம் அமைத்து நீட்தேர்வு கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என க. பரமத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் வருகை
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு ஈரோட்டில் இருந்து கார் மூலம் கரூருக்கு வந்தார். அவருக்கு கரூர் மாவட்ட எல்லையான தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பாலம் அருகே கரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தலைமையில், சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. கரூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் நொய்யல்சேகர் (என்கிற) குணசேகரன், புன்செய் புகளூர் பேரூர் கழக செயலாளர் சாமிநாதன், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் முரளிராஜா, காகிதபுரம் பேரூர் கழக செயலாளர் தங்கராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஓய்வெடுத்துக்கொண்டார். நேற்று காலை கார் மூலம் கிளம்பிய உதயநிதி ஸ்டாலின் அரவக்குறிச்சி செல்லும் வழியில் பெத்தான்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த செங்காந்தள் மலர் பயிரினை பார்வையிட்டு, அதுகுறித்து அந்த தோட்ட விவசாயியிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அந்த பகுதியில் உள்ள மற்றொரு விவசாயியின் தோட்டத்திற்கு சென்ற அவர், அங்கு விளைவிக்கப் பட்டிருந்த முருங்கை செடிகளை பார்வையிட்டு, அதன் உற்பத்தி குறித்தும், செலவினங்கள் குறித்தும், உரிய விலை கிடைக்கிறதா? என்று அந்த விவசாயியிடம் கேட்டறிந்தார்.
பிரசாரம்
செம்மறி ஆடு வளர்ப்பவரிடம் ஆடு வளர்ப்பு முறை குறித்து கேட்டறிந்து, அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆட்டுப்பட்டியில் இருந்த ஒரு ஆட்டுக்குட்டியை தூக்கி தழுவி பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி வழியாக வந்த ஒரு குடும்பத்தினருடன் செல்பி எடுத்து கொண்டார். தொடர்ந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் அவருக்கு வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அரவக்குறிச்சி புங்கம்பாடி பிரிவில், பள்ளப்பட்டி ஷா நகரில் பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூர் அணையில் இருந்து இடையக்கோட்டை வழியாக நங்காஞ்சி ஆற்றுக்கு வரும் உபரி நீரை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து க.பரமத்திக்கு சென்றார். அவரை க.பரமத்தி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மொஞ்சனூர் பி.ஆர்.இளங்கோ, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நெடுங்கூர் கார்த்தி ஆகியோர் வரவேற்றனர். கரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். மாநில கழக நெசவாளர் அணி செயலாளர் பரணி.கே.மணி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதிஸ்டாலின் பேசியதாவது:-
டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்
கடந்த சட்டமன்ற தேர்தலில் வி.செந்தில்பாலாஜிக்கு உதயசூரியன் சின்னத்திற்கும், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்திற்கும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த இந்த பகுதி மக்களுக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியில் 38 தொகுதியில் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தீர்கள். அந்த வெற்றியின் மூலம் இந்தியாவிலேயே தி.மு.க. 3-வது பெரிய கட்சியாக விளங்கியது. இந்த பெருமையை தேடித் தந்தது நீங்கள்தான். இந்த வெற்றியால் தான் மோடிக்கு தமிழ்நாட்டின் மீது ஒரு கோபம் இதேபோல் இன்னும் இரண்டு மாதத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எதிர் வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.
திருப்பிகேட்போம்
இதன் மூலம் பா.ஜ.க.வையும், அ.தி.மு.க.வையும் ஓட ஓட விரட்ட வேண்டும். புயல் நிவாரண நிதிக்கு ரூ.ஆயிரம் கோடியை தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என மோடியிடம் கேட்டோம். ஆனால் தரவில்லை. இது நம்முடைய வரிப் பணம். அந்தப் பணத்தைத் தான் திருப்பிக் கேட்டோம். ஆனால் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடியும், அவர் வெளிநாடு செல்வதற்கு ரூ.7 ஆயிரம் கோடியில் புதிய விமானம் வாங்கிக்கொண்டார்.
இதனை யார் தட்டிக் கேட்க வேண்டும். மக்களில் ஒருவனாக எடப்பாடி பழனிசாமி தட்டிக்கேட்க வேண்டும். ஆனால் அவர் எடுபுடி ஆகவே இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று நீங்கள் ஓட்டு போட்டீர்கள். ஆனால் அவர் இறந்து விட்டார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. இன்றுடன் 1 வருடம் ஆகிவிட்டது. இதுவரை ஒரு விசாரணை கமிஷன் கூட செல்லவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களை ஜெயிலுக்கு அனுப்புவோம். இரண்டு முறை அ.தி.மு.க.விற்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர வைத்தீர்கள். இவர்கள் மத்தியில் உள்ள மோடியிடம் தமிழகத்தை அடமானம் வைத்து விட்டார்கள். மீண்டும் அந்தத் தவறை நீங்கள் செய்தால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து தமிழ்நாட்டை மோடிக்கு விற்று விடுவார்கள். மத்திய அரசு மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வை கொண்டு வந்தது. ஆனால் தி.மு.க., மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் அனைவரும் அதனை எதிர்த்தனர்.
தனி அமைச்சகம்
இதேபோல் ஜெயலலிதாவும் இந்த நீட் தேர்வை எதிர்த்தார்கள். கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக முடியாமல், செலவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். இனிமேலும் ஒரு உயிர் கூட போகக்கூடாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து நூறு நாளில் நீட் தேர்வையும், கல்விக் கடனையும் ரத்து செய்யும். இதற்கு நமது தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கடந்த இரண்டு நாளைக்கு முன்னாடி எடப்பாடி கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க் கடன் ரத்து என்று கூறுகிறார். இவர் முதல்-அமைச்சர் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது அப்போதெல்லாம் தள்ளுபடி செய்யாதவர் இப்போது எதற்காக செய்கிறார். தேர்தலுக்காக செய்கிறார். கடந்த வாரம் தலைவர் கலைஞரின் 96-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளின் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்வோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆட்சி அமைந்ததும் ரூ.7 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தான் நமது தலைவர் ஸ்டாலின் 2021 தேர்தல் வாக்குறுதிகளும் அனைத்து விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறினார். இதை அப்படியே காப்பி செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என்றார்.
கதறி அழுத பெண்
உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு முன்பு தி.மு.க. தலைவர் கலைஞர் போல் வேடம் அணிந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள், பெண்கள் அனைவரும் செல்பி எடுத்துக்கொண்டனர். மேலும் அவரை பார்த்ததும் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் கதறி அழுதார். இது பார்ப்பவர்களுக்கு பரிதாபமாக இருந்தது. முன்னதாக சின்னதாராபுரத்தில் க.பரமத்தி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கே.கருணாநிதி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து சின்னதாராபுரம், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் வேனில் இருந்தவாறு பிரசாரம் செய்தார். பின்னர் புகளூர் செய்தித்தாள் காகித ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புகளூர் வாய்க்காலில் கலக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் உதயநிதி ஸ்டாலினிடம் புகளூர் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் பாழடைந்து வருவதாக கூறியதன் பேரில் தோட்டக்குறிச்சி- அய்யம்பாளையம் இடையே புகளூர் வாய்க்காலில் கழிவுநீர் கலக்கும் இடத்தை உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள விவசாயிகளிடம் இதுகுறித்து தி.மு.க. தலைவரும் கூறுவதாகவும், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீர் கலக்காமல் செய்வதாக உறுதி அளித்தார். பின்னர் கரூர் நோக்கி சென்றார்.
கூட்டம்
தொடர்ந்து கரூர் ராயனூரில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், தற்போது இருக்கும் எழுச்சியை போல் 2 மாதங்களுக்கு எழுச்சியுடன் செயல்பட்டால் 234 தொகுதிகளையும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அறிவிக்கப்படும் வேட்பாளர்களை வெற்றிபெற செய்து சென்னை கோட்டைக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story