அதிகாரிகளை கிராம மக்கள் சிறை பிடிப்பு
குடியாத்தம் அருகே பொது இடத்தை அளக்க வந்த ெபண் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் சிறை பிடித்தனர். அவரை மீட்க வந்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளரையும் அடுத்தடுத்து சிறை பிடித்தனர்.
குடியாத்தம்
அளக்க வந்த அதிகாரி
குடியாத்தம் தாலுகா கல்லப்பாடி ஊராட்சி கனவாய் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் டி.ஆர்.உதயகுமார். இவர், அந்தக் கிராமத்தில் உள்ள சாலை, பொது இடத்தை அளந்து தருமாறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். 5-ந்தேதி குடியாத்தம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி கிராமத்துக்கு சாலையை அளக்க வந்தார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன், சாலையை அளக்கும்போது தங்களிடம் இருக்கிற ஆவணங்களில் உள்ளபடி அளக்க வேண்டும், எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி சாலையை அளக்கவில்லை. இதையடுத்து உதயகுமார் தரப்பினர் அங்குள்ள அரசு கட்டிடத்தில் வைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தியை சிறை பிடித்தனர். பல மணி நேரத்துக்குப் பின் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், வருகிற திங்கட்கிழமை (அதாவது நேற்று) சாலை, பொது இடத்தை அளப்பதாக உறுதியளித்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தியை மீட்டுச் சென்றார்.
சிறை பிடிப்பு
2 நாட்களுக்கு முன்பு சரவணன் தரப்பினர், சாலை மற்றும் பொது இடத்தை அளப்பதற்கான ஆவணங்களில் குளறுபடி இருக்கிறது, எனவே தங்களிடம் இருக்கிற ஆவணங்களில் உள்ளபடி அளக்க வேண்டும், சாலையின் அகலம், அளவீடுகளில் தவறுகள் உள்ளது எனக் கூறினர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி மீண்டும் சாலை, பொது இடத்தை அளக்க கல்லப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்துள்ளார். ஆனால் அவர், சாலை மற்றும் பொது இடத்தை அளக்க வரவில்லை.
உடனே உதயகுமார் தரப்பினர் வந்து, சாலை மற்றும் பொது இடத்தை அளக்க வேண்டும், என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தியிடம் கேட்டனர். ஆனால் அவர் அளக்க வரவில்லை. பகல் 11 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து ஜெயந்தியை சிறை பிடித்தனர். அவரை மீட்க வந்த கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோரை உதயகுமார் தரப்பினர் அடுத்தடுத்து சிறை பிடித்தனர்.
காருக்கு கீழே படுத்து போராட்டம்
குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், தாசில்தார் வத்சலா, குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களிடமும், உதயகுமார் தரப்பினர் சாலை, பொது இடத்தை அளக்க வலியுறுத்தி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு அதிகாரிகளை முற்றுகையிட்டும், உதவி கலெக்டர் ஜீப்பின் முன்னால், பின்னால் படுத்தும் சிறை பிடிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் இரவு 7 மணியளில் விரைந்து வந்து சிறை பிடிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, 7½ மணிநேரம் சிறை பிடிக்கப்பட்டு இருந்த பெண் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், தாசில்தார் வத்சலா, உதவி கலெக்டர் ஷேக்மன்சூர் ஆகியோரை மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story