சேலம் பெரியார் மேம்பாலத்தில் விதிமீறும் வாகனங்களால் விபத்துகள் அதிகரிப்பு


சேலம் பெரியார் மேம்பாலத்தில் விதிமீறும் வாகனங்களால் விபத்துகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Feb 2021 4:19 AM IST (Updated: 9 Feb 2021 4:19 AM IST)
t-max-icont-min-icon

சேலம் பெரியார் மேம்பாலத்தில் விதிமீறும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால் மேம்பால சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிக்கடி விபத்து
சேலம்-ஓமலூர் ரோட்டில் அண்ணா பூங்கா பகுதியில் பெரியார் மேம்பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் நோக்கியும், அங்கிருந்து பழைய பஸ் நிலையத்திற்கும் வாகனங்கள் மற்றும் பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால் மேம்பால சாலையின் நடுவே போதிய அளவு தடுப்பு அமைக்காததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதும், வாகன ஓட்டிகள் படுகாயம் அடைவதும் அவ்வப்போது நடந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, அண்ணா பூங்கா எதிரில் இருந்து பெரியார் மேம்பாலத்தில் போக்குவரத்து போலீசார் சார்பில் 200 மீட்டர் தூரத்திற்கு பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த தடுப்பை தாண்டி கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் பாலத்தின் நடுவில் பாதி வழியில் குறுக்காக திரும்பி செல்கின்றன. வாகனங்களின் இந்த விதிமீறலால் பாலத்தில் வரும் மற்ற வாகனங்கள், அணிவகுத்து நிற்கின்றன. பல நேரங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன.

எனவே வின்சென்ட் பகுதியில் சாலையின் நடுவே அமைத்து இருப்பது போல் பெரியார் மேம்பாலத்திலும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

விபத்து
இதனிடையே நேற்று பிற்பகல் அண்ணா பூங்கா அருகில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடுப்புகளை மொபட்டில் வந்த ஒருவர் கடந்து ஒரு வழிப்பாதையில் திரும்ப முயன்றார். அப்போது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இந்த விபத்தில் வாகனங்களில் வந்த அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் ஒருவர் மதுபோதையில் இருந்ததால் பொதுமக்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே அங்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பின்னர் படுகாயம் அடைந்த 2 பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

போலீஸ் மீது புகார்
இந்த பாலத்தில் உள்ள பிளாஸ்டிக் தடுப்புகளை தாண்டி திரும்பும் வாகன ஓட்டிகள் மீது எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பும் பணியில் போக்குவரத்து போலீசார் காலை நேரத்தில் மட்டுமே ஈடுபடுகின்றனர். மற்ற நேரங்களில் அங்கு யாரும் பணியில் இருப்பதில்லை என்பதால் வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபட்டு விபத்துக்குள்ளாவது தொடர் நிகழ்வாக மாறி வருகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சமீபத்தில் இங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தடுப்புகள் மீது வாகனங்கள் மோதியதால் பாதி உடைந்து சேதமானது. இதையடுத்து உடைந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் பிளாஸ்டிக் டேப்பை தடுப்புகளில் கட்டி வைத்துள்ளனர். எனவே, அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க பெரியார் மேம்பாலத்தில் இருந்து அண்ணா பூங்கா வரைக்கும் சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். இந்த பிரச்சினையில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலையிட்டு பெரியார் மேம்பாலம் பகுதியில் அடிக்கடி நடக்கும் விபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story