தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஆத்தூர், சேலம் தெற்கு தொகுதிகள் ஒதுக்கப்படுமா?


தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஆத்தூர், சேலம் தெற்கு தொகுதிகள் ஒதுக்கப்படுமா?
x
தினத்தந்தி 10 Feb 2021 3:52 AM IST (Updated: 10 Feb 2021 3:52 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஆத்தூர், சேலம் தெற்கு தொகுதிகள் ஒதுக்கப்படுமா? என தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஆத்தூர், சேலம் தெற்கு தொகுதிகள் ஒதுக்கப்படுமா? என தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் கிராமசபை வழியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகின்றார்.
சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியை தவிர மற்ற தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. இந்த முறை அனைத்து தொகுதியையும் கைப்பற்றுவதற்காக அ.தி.மு.க.வினர் அரசின் சாதனைகள் குறித்த துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.
2 தொகுதிகளில் காங்கிரஸ்
சேலம் மாவட்டத்தில் இந்த முறை தி.மு.க. 9 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. 2 தொகுதிகள் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கப்படுவதாக தெரிகிறது. கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் ஆத்தூர் (தனி), சங்ககிரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு தோல்வியடைந்தது.
இந்த முறை காங்கிரஸ் சார்பில் ஆத்தூர் (தனி) தொகுதி மற்றும் சேலம் தெற்கு ஆகிய 2 தொகுதிகள் காங்கிரஸ் தரப்பில் தி.மு.க.விடம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறும் போது, சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் உள்பட 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் பலர் விரும்புகின்றனர். இருந்தாலும் எங்களது தலைமை முடிவு எடுத்து எந்த தொகுதிகளில் போட்டியிட சொல்கிறதோ அதன்படி செய்வோம் என்கின்றனர்.
மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை 
இதனிடயே கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரசுக்கு ஆத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 2 முறையும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதனால் இந்த தொகுதியில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. தலைமைக்கு நிர்வாகிகள் பலர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் காங்கிரசுக்கு இந்த முறை ஆத்தூர் ஒதுக்கப்படமாட்டாது எனவும். அதற்கு பதிலாக ஓமலூர் தொகுதி ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளன.  ஆகையால் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை என்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Next Story