ஏலகிரிமலையில் பாராகிளைடிங் விளையாட்டு நடத்த நடவடிக்கை


ஏலகிரிமலையில் பாராகிளைடிங் விளையாட்டு நடத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Feb 2021 10:18 PM IST (Updated: 12 Feb 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

ஏலகிரிமலையில் பாராகிளைடிங் விளையாட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டத்தில் கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

ஏலகிரிமலை சுற்றுலா தலத்தை மேம்படுத்துவது குறித்து மாவட்ட அளவிலான சுற்றுலா ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. 
கூட்டத்துக்கு கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கி பேசியதாவது:-

இசை நீரூற்று

ஏலகிரிமலையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றி, அங்கு தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. ஏலகிரிமலையில் பாரா கிளைடிங் விளையாட்டு, கோல்ப் (குழிப் பந்தாட்டம்) விளையாட்டு மைதானம் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நடத்துதல், தொலைநோக்கு மையக்கட்டிடம் மேம்படுத்துதல், பி.ஆர்.ஏ.எஸ்.ஏ. திட்டத்தில் சமூதாயக்கூடம், குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவறை வசதி மற்றும் மின் விளக்கு வசதி ஆகிய அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல்.

ஆம்பி தியேட்டர், நிலாவூர் படகு இல்லம் மற்றும் குழந்தைகள் பூங்கா சீர் செய்தல், புங்கனூர் படகுத்துறை பூங்கா நுழைவாயில், வணிக வளாகம், சிற்றுண்டி, கழிவறை மற்றும் மீன் மகசூல் ஏலம் விடுவது, ஏலகிரிமலை இயற்கை பூங்காவில் உள்ள இசை நீரூற்று சீரமைத்தல், யாத்ரி நிவாஸ் கட்டிடம் பழுது நீக்கி சரி செய்வது, கூடுதல் வசதி செய்வது பற்றி சம்பந்தப்பட்ட அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

ஊட்டல் சரஸ்வதி கோவில்

பாராகிளைடிங் விளையாட்டு தொடங்கிட பாராகிளைடிங் பயிற்சி அளிக்கும் வல்லுனர்கள், வெளிநாட்டினர் பைலட் ஏலகிரிமலையில் ஆய்வு செய்து, அங்கு நிலவும் சாதகங்களை கேட்டறிந்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இத்திட்டத்தைச் செயல்படுத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் பணியாற்றிட வேண்டும்.
மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அதிகமாக அறியப்படாத ஊட்டல் சரஸ்வதி கோவிலை சுற்றுலா தலமாக மேம்படுத்துதல், கைலாசகிரி மலைப்பகுதியை சுற்றுலா தலமாக உருவாக்குதல், நாய்க்கனேரி ஏரியில் படகு குழாம் அமைக்க தேவையான நடவடிக்கையை ஆய்வு செய்து, அலுவலர்கள் அங்கு நிலவும் சாதகங்களையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், சப்-கலெக்டர் வந்தனா கர்க். வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர், நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஹாஜீஹரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருண், உதவி சுற்றுலா அலுவலர் இளமுருகன், பாராகிளைடிங் பயிற்சி வல்லுனர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story