திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா: சுவாமி-அம்பாள் வீதிஉலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழாவின் 4-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
4-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, 8 வீதிகளும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story