வருவாய்த்துறையினர், போலீசாருடன் இணைந்து பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிய வேண்டும் கலெக்டர் மெகராஜ் உத்தரவு
வருவாய்த்துறையினர் போலீசாருடன் இணைந்து பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிய வேண்டும் என கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் போலீசாருடன் இணைந்து பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டு உள்ளார்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் இணைந்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணியை மேற்கொள்ள வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்திட வேண்டும்.
தங்கள் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளில் கண் பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் குறித்த விவரங்களை வாக்குச்சாவடி வாரியாக சேகரிக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
அடிப்படை வசதிகள்
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களுக்கான சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடிகளில் காற்றோட்ட வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி, கழிப்பிட வசதி உள்பட அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கோட்டைக்குமார், மணிராஜ், சக்திவேலு, மோகனசுந்தரம், மரகதவள்ளி ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தேர்தல் தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story