16 கடைகள் எரிந்து சாம்பல்; ரூ.1½ கோடி சேதம்


16 கடைகள் எரிந்து சாம்பல்; ரூ.1½ கோடி சேதம்
x
தினத்தந்தி 25 Feb 2021 8:41 PM GMT (Updated: 25 Feb 2021 8:41 PM GMT)

மதுரை டவுன் ஹால் ரோடு தெப்பத்தை சுற்றியுள்ள 16 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1½ கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

மதுரை,பிப்.
மதுரை டவுன் ஹால் ரோடு தெப்பத்தை சுற்றியுள்ள 16 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1½ கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
பயங்கர தீ விபத்து
மதுரை டவுன் ஹால் ரோட்டில் கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தை சுற்றிலும் பல்வேறு கடைகள் உள்ளன. கோவில் நிர்வாகம் அந்த கடைகளை அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்பேரில் குளத்தின் தெற்கு பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அகற்றப்பட்டு விட்டன. மேலும் மற்ற பகுதியில் உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் திடீரென்று வடக்குப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மள, மளவென்று ஒவ்வொரு கடையாக பரவியது. தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அந்த பகுதியில் இருந்த துணிக்கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை, செல்போன், டி.வி, கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் எரிந்து நாசமானது. 16 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். கடைக்காரர்கள் தங்கள் கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து போனதாக திடீர்நகர் போலீசில் புகார் அளித்தனர்.
தெப்பத் திருவிழா நடைபெறுமா?
16 கடைகளில் மொத்தம் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தவிர தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இந்த  தீ விபத்தினால் தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா  நடைபெறுமா என்று பக்தர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது, தெப்பக்குளத்தின் மேல் பகுதியில் உள்ள கடைகளில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தீ விபத்திற்கான பரிகார பூஜை இன்று (வெள்ளக்கிழமை) காலை தெப்பக்குளத்தில் செய்ய உள்ளோம். திருவிழாவில் தெப்பத்தை சாமி சுற்றி வருவதால் தீ விபத்து நடந்த இடத்தை சுற்றிலும் மறைவு ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நாளை (சனிக்கிழமை) தெப்பத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

Next Story