கர்ப்பிணிகளுக்கு கீரை வழங்க மாடித்தோட்டம் அமைக்கும் பணி


கர்ப்பிணிகளுக்கு கீரை வழங்க மாடித்தோட்டம் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 26 Feb 2021 10:18 PM IST (Updated: 26 Feb 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

திருவெற்றியூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு கீரை வழங்க மாடித்தோட்டம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

தொண்டி, 
திருவெற்றியூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு கீரை வழங்க மாடித்தோட்டம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
ஊட்டச்சத்து
திருவாடானை தாலுகா, திருவெற்றியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கியின் ஒருங்கிணைப்புடன் தமிழ்நாடு கிராம வங்கியின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.60 ஆயிரம் நிதி உதவியுடன் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த கீரைகள் வழங்கும் வகையில் மாடித்தோட்டம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இதனை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவெற்றியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய முயற்சியாக இந்த திட்ட பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் விரிவுபடுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  மாடி தோட்டங்களில் ஊட்டச்சத்து நிறைந்த கீரை வகைகள் வளர்த்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிசோதனைக்கு வருகைதரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரவு
 வைட்டமின், இரும்புச்சத்து புரோட்டின், தாது உப்புக்கள் அடங்கிய கீரை வகைகளை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களது ஆரோக்கியம் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் தண்ணீர் வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர். உடனடியாக தண்ணீர் வசதி செய்து கொடுக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அவர் உத்தரவிட்டார்.பின்னர் அந்த பகுதியில் 100 வேலை திட்ட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மாவட்ட கலெக்டரிடம் தங்களுக்கு தினக்கூலியாக ரூ.110 மட்டுமே வழங்கப்படுகிறது. அதனை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவெற்றியூரில் குடிநீர் பிரச்சினை அதிகஅளவில் உள்ளது என்று தெரிவித்தனர். 
அப்போது ஊராட்சி தலைவர் கலா முத்தழகு திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற ஆலயம் இருப்பதால் தினமும் அதிகஅளவில் மக்கள் கூட்டம் வருகிறது. இதனால் பொதுசுகாதார பணிகள் மற்றும் குடிநீர்பணிகளுக்கு அதிகஅளவில் நிதி தேவை படுகிறது.
மனு 
இந்த ஊராட்சிக்கு சிறப்பு நிதி மற்றும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். காவிரி குடிநீர் வந்து மாதக்கணக்கில் ஆகிவிட்டது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்து தரவேண்டும் என கோரிக்கை மனுக்கள் அளித்தார். பொதுமக்களின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் உறுதிஅளித்தார். 
அவருடன் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைதேகி, டாக்டர் சிநேகரத்னம், ஊராட்சி தலைவர் கலா முத்தழகு, ஊராட்சி செயலாளர் அருள் சகாய செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு கிராம வங்கி பொதுமேலாளர் தாமோதரன், மண்டல மேலாளர் கண்ணன் உள்பட அரசு அலுவலர்கள் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Next Story