தி.மு.க.வினர் பட்டாசு வெடித்ததில் எம்.ஜி.ஆர். சிலை தீப்பிடித்து எரிந்தது

கந்திலி அருகே மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தபோது எம்.ஜி.ஆர்.சிலையில் தீப்பொறி பட்டு சிலை தீ பிடித்து எரிந்தது. இதனால் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
கந்திலி அருகே மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தபோது எம்.ஜி.ஆர்.சிலையில் தீப்பொறி பட்டு சிலை தீ பிடித்து எரிந்தது. இதனால் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எம்.ஜி.ஆர். சிலை தீ பிடித்து எரிந்தது
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில், மெயின் ரோடு அருகே எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. தேர்தல் காரணமாக தலைவர்களின் சிலைகள் துணிகளால் மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கந்திலி ஒன்றிய தி.மு.க. சார்பில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அந்தப்பகுதியில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பட்டாசு வெடித்த போது தீப்பொறி பறந்து எம்.ஜி.ஆர். சிலை மூடப்பட்டிருந்த துணி மீது விழுந்து தீ பிடித்தது. இதில் மளமளவென தீ பரவி சிலை முழுவதும் எரிந்தது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் வாளியில் தண்ணீர் கொண்டுவந்து சிலை மீது ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் சிலை மீது இருந்த பெயிண்டுகள் மீது தீப்பிடித்து சிலை முழுவதும் கருப்பாக காட்சி அளித்தது.
சாலை மறியல்
இதுபற்றி தகவலறிந்ததும் அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அவர்கள் எம்.ஜி.ஆர். சிலை தீ பிடிப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த கந்திலி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மறியல் காரணமாக திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒருவர் கைது
இந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க. பிரமுகர் கெஜராஜ் கொடுத்த புகாரின் பேரில் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியதாக தாதகுட்டை பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 50) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story