பர்கூர் மலைப்பகுதியில் பரபரப்பு சிறு-குறு விவசாயிகள் கணக்கெடுக்கும் படிவம் குப்பையில் கிடந்தது

பர்கூர் மலைப்பகுதியில் சிறு-குறு விவசாயிகள் கணக்கெடுக்கும் படிவம் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதியில் சிறு-குறு விவசாயிகள் கணக்கெடுக்கும் படிவம் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறு-குறு விவசாயிகள்
மத்திய அரசு பிரதம மந்திரியின் கிசான் திட்டம் என்ற திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. சிறு-குறு விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதே இந்த திட்டமாகும். இதற்காக விவசாயிகள் சிறு-குறு விவசாயிகள் என்ற சான்றை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கினார்கள். அதை வைத்தே அவர்களுக்கு மத்திய அரசு ரூ.6 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தியது.
அந்தியூர் அருகே உள்ளது பர்கூர் மலை கிராமம். இந்த கிராமத்தை ஒட்டியே அதிக அளவில் குக்கிராமங்களும் உள்ளன. இங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். இவர்களில் பலர் தாங்கள் சிறு-குறு விவசாயிகள் என்ற படிவத்தை அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கியிருந்தார்கள்.
குப்பையில் கிடந்தது
இந்தநிலையில் நேற்று காலை பர்கூர் மலை கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் விவசாயிகள் அளித்திருந்த சிறு-குறு விவசாயிகள் கணக்கெடுக்கும் படிவத்தை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.
இதைப்பார்த்த குழந்தைகளின் பெற்றோரும், அப்பகுதி பொதுமக்களும் குழந்தைகளிடம் இந்த படிவம் எங்கு கிடைத்தது? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் குப்பையில் கிடந்தது என்றனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த குப்பை எங்கு உள்ளது என்று கேட்டு அங்கு சென்று பார்த்தார்கள். அப்போது மேலும் பல விண்ணப்ப படிவங்கள் அங்கு கிடந்தன. விண்ணப்ப படிவங்கள் கிடந்த குப்பையில் இருந்து சிறிது தூரத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. உடனே பொதுமக்கள் பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.
விவசாயிகள் வேதனை
அதன்பேரில் பர்கூர் போலீசார், அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தார்கள். பின்னர் படிவங்கள் அனைத்தையும் கைப்பற்றினார்கள். மேலும் விவசாயிகள் அளித்த விண்ணப்பங்கள் எப்படி குப்பைக்கு வந்தது? அதை கொண்டுவந்து போட்டது யார் ? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில், விவசாயிகள் அளித்த விண்ணப்பங்கள் குப்பையில் கிடந்தது பர்கூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. நலத்திட்டங்களுக்காக அளித்த விண்ணப்பங்கள் குப்பைக்கு போனது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story