கோடை காலம் தொடங்கியதால் பர்கூர் வனப்பகுதியில் தண்ணீரை தேடி அலையும் யானைகள்; தொட்டிகளில் நீர் நிரப்ப வேண்டுகோள்


கோடை காலம் தொடங்கியதால் பர்கூர் வனப்பகுதியில் தண்ணீரை தேடி அலையும் யானைகள்; தொட்டிகளில் நீர் நிரப்ப வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 March 2021 2:46 AM IST (Updated: 11 March 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

கோடை காலம் தொடங்கியதால் பர்கூர் வனப்பகுதியில் தண்ணீரை தேடி யானைகள் அலைகின்றன. அதனால் தொட்டிகளில் வனத்துறையினர் நீர் நிரப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்தியூர்
கோடை காலம் தொடங்கியதால் பர்கூர் வனப்பகுதியில் தண்ணீரை தேடி யானைகள் அலைகின்றன. அதனால் தொட்டிகளில் வனத்துறையினர் நீர் நிரப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
யானைகள்
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மற்றும் தட்டகரை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், இலை-தழைகள் உண்டும், காட்டு ஆறுகள், ஓடைகளில் தாகம் தணித்தும் ஆண்டுக்கு சுமார் 7 மாதங்கள் யானைகள் கும்மாளமாக சுற்றித்திரிகின்றன. ஆனால் கோடை காலங்களில் 5 மாதங்கள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அலைந்து துன்புறுகின்றன. 
தண்ணீருக்கு தவிப்பு
கோடை காலங்களில் காய்ந்த இலை-தழைகளை உண்டு ஓரளவு பசியை போக்கிக்கொள்ளும் யானைகள் காட்டு ஆறுகள், ஓடைகள் வற்றிவிடுவதால் தண்ணீருக்குதான் தவியாய் தவிக்கின்றன. 
இதனால் கோடை கால பயன்பாட்டுக்காக வனப்பகுதியில் வனத்துறையினர் ஆங்காங்கே செயற்கை குட்டைகள், தொட்டிகள் கட்டி வைத்துள்ளார்கள். லாரிகளில் கொண்டு சென்று இவைகளில் தண்ணீரை நிரப்புவார்கள். 
நீர் நிரப்ப வேண்டுகோள்
தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் பர்கூர் வனப்பகுதி காய்ந்து கிடக்கிறது. இலை, தழைகள் சருகுகளாக காட்சி தருகின்றன. ஓடைகள், காட்டாறுகள் வற்றி கிடக்கின்றன. இதனால் யானைகள் தண்ணீரை தேடி காட்டுக்குள்ளேயே பல மைல்கள் அலைந்து திரிகின்றன. சில நேரங்களில் அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள நெடுஞ்சாலைகளுக்கும் சென்றுவிடுகின்றன. 
எனவே யானைகளின் தாகத்தை தீர்க்க வனத்துறையினர் செயற்கை குட்டைகளிலும், தொட்டிகளிலும் விரைந்து நீர் நிரப்ப வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Next Story