இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் இறந்த பாதயாத்திரை பக்தர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
பாதயாத்திரை பக்தர் பலி
திண்டுக்கல்லை அடுத்த செட்டியபட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி பேபிராணி. இவர்களுக்கு சதீஷ் (வயது 18) என்ற மகனும், கயல்விழி (17) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றார்.
சுரைக்காய்பட்டி பிரிவு அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த அரசு பஸ், சதீஷ் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர், உரிய இழப்பீடு கேட்டு கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசு பஸ் ஜப்தி
மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஜெயராமன் வழக்கை நடத்தி வந்தார்.
பல்வேறு கட்டங்களாக நடந்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில், விபத்தில் இறந்த சதீசின் குடும்பத்தினருக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.7 லட்சத்து 28 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த கோர்ட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இழப்பீடு வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ.9 லட்சத்து 72 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன் பிறகும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர், கோர்ட்டில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி சரவணன், இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல்-மதுரை வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் நேற்று திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மதுரை வழித்தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினர்.
Related Tags :
Next Story