அரசு வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தம்

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களை கண்காணிக்க அரசு வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம்,
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேதி அறிவிக்கப்பட்ட கடந்த மாதம் 26-ந் தேதி மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ கொடுத்து வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்காக அவற்றை வாகனங்களில் எடுத்துச்செல்வார்கள்.
இதனை கண்காணித்து தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 21 பறக்கும் படை குழுக்களும், 21 நிலையான கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் தனியாக அரசு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜி.பி.எஸ். கருவி பொருத்தம்
இவ்வாறு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுவில் உள்ள அலுவலர்கள் முறையாக செயல்படுகின்றனரா? என்பதை கண்காணிக்க அவர்கள் பயன்படுத்தி வரும் வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவியை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் பயன்படுத்தி வரும் வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டு வருகிறது.
இவர்கள் எந்த நேரத்தில் எந்தெந்த இடத்தில் பணியில் இருக்கிறார்கள் என்பதை ஜி.பி.எஸ். கருவியின் மூலம் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story