பென்னாகரம் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த குட்டி யானை

பென்னாகரம் அருகே வனப்பகுதியில் 5 வயது குட்டி ஆண் யானை இறந்து கிடந்தது.
பென்னாகரம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி உள்ளிட்ட வனப்பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் வனப்பகுதிக்கு வந்தன. இந்த யானைகள் கூட்டம், கூட்டமாக சென்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் குடித்து செல்கின்றன. இதற்காக யானைகள் அவ்வப்போது சாலையை கடந்து சென்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று வனத்துறையினர் போடூர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சுமார் 5 வயது மதிக்கத்தக்க குட்டி ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சேகருக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர் இறந்து கிடந்த குட்டி ஆண் யானையை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் வனப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி வனத்துறையினர் இறந்த யானையை புதைத்தனர். தண்ணீர், உணவு கிடைக்காததால் குட்டி யானை இறந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story