திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1¼ கோடி பறிமுதல்


திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1¼ கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2021 4:38 AM IST (Updated: 23 March 2021 4:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் கணக்கில் வராத ரூ.1¼ கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்
திருப்பூரில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் கணக்கில் வராத ரூ.1¼ கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாகன சோதனை 
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, வாகன சோதனை நடந்து வருகிறது. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.
இதுபோல் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு செல்லப்படும் பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியில் கூடுதல் பறக்கும் படை அதிகாரி சுனில் கவுசிக் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
கட்டுக்கட்டாக பணம் 
அந்த வேனை திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார். வேனில் அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் (28) என்பவர் உள்பட 2 பேர் இருந்தனர். அதைத்தொடர்ந்து வேனை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது வேனில் ஒரு மூட்டை இருந்தது. அந்த மூட்டையை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக, பணம் இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இந்த பணத்துக்கான ஆவணத்தை கேட்டனர். அப்போது அதற்கான ஆவணங்கள் முறையாக இல்லை என்பது தெரியவந்தது. அதிகாரிகளுக்கு திருப்திகரமாகவும் இல்லை. இதனைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெகநாதனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ரூ.1 கோடியே 11 லட்சம் பறிமுதல்
விசாரணையில் திருப்பூர் காந்திநகரில் உள்ள சி.எம்.எஸ். என்ற ஏஜென்சி நிறுவனம் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்புவது. தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் நகைக்கடைகளில் இருந்து பணத்தை வசூல் செய்து, அதனை வங்கிகளில் செலுத்துவது மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை திருப்பூரில் உள்ள ஒரு பிரபலமான நகைக்கடையில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு காந்திநகரில் உள்ள வங்கியில் பணத்தை செலுத்துவதற்கு கொண்டு வந்துள்ளனர்.
இருப்பினும் இதற்கான ஆவணம் மொத்த தொகைக்கு இருந்தது. ஆனால் அந்த பணம் யார், யாரிடம் இருந்து பெறப்பட்டது என்ற ஆவணம் இல்லை. இந்த முரண்பாடு காரணமாக அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். ஒட்டுமொத்தமாக ரூ.1 கோடியே 11 லட்சத்து 4 ஆயிரத்து 204 பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த பணம் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
இதற்கிடையே ரூ.1 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் சம்பவ இடத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் தொடர்ந்து வேன் டிரைவரிடமும், வாகனத்தில் இருந்தவரிடமும் விசாரணை நடத்தினர். இருப்பினும் இந்த ஆவணத்தில் அதிகாரிகளுக்கு தொடர்ந்து சந்தேகம் இருந்ததால், வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த பணத்திற்கு வரி கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இன்னும் ஒரு சில நாட்களில் இது தொடர்பாக சி.எம்.எஸ். ஏஜென்சி நிறுவனத்திற்கும், நகைக்கடைக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கவும் முடிவு செய்துள்ளனர். தேர்தல் நெருங்கிய நிலையில் திருப்பூரில் ரூ.1 கோடி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏலக்காய் வியாபாரி 
இதுபோல் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி முத்துதாமஸ் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரளாவை சேர்ந்த ஏலக்காய் வியாபாரி சையது வயது 38 என்பவர் காரில் வந்தார். அந்த காரில் நடத்திய சோதனையில் காரில் ரூ.4 லட்சம் இருந்தது.
இதற்கான ஆவணம் இல்லாததால் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பறக்கும் படை அதிகாரி மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் கணக்கம்பாளையம் வாஷிங்டன்நகர் பகுதியில் சோதனை செய்த போது, பாண்டியன்நகரை சேர்ந்த பின்னலாடை தொழில் செய்து வரும் ராம்குமார் 30 என்பவர் காரில் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 500 இருந்தது. இதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபோல் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியாண்டிபாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, மோட்டார் சைக்கிளில் வந்த புவனேஷ்வர்நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் இருந்த ரூ.10 லட்சத்து 66 ஆயிரத்து 220 பறிமுதல் செய்யப்பட்டது.
பெண்ணிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்
மடத்துக்குளம் எல்லைப் பகுதியான மறையூர், மானுப்பட்டி, கல்லாபுரம் மற்றும் ஒன்பதாறு சோதனைசாவடி ஆகிய பகுதிகளில் மடத்துக்குளம் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் பறக்கும் படை குழுவான ஏ டீம் ராஜேஸ்வரி தலைமையில், மடத்துக்குளம் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, மற்றும் போலீசார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி, சோதனை செய்தனர்.
அப்போது அந்தவழியாக வந்த ஒரு காரை பறக்கும்படையினர் தடுத்து நிறுத்தினர். அந்து காரில் சாந்தி  30, மணி 35, மற்றும் 2 பேர் என மொத்தம் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் மூணாறு பகுதியில் இருந்து திருச்செங்கோடு செல்வதாக கூறினர். பின்னர் காரில் வந்தவர்களை கீழே இறக்கி சோதனை நடத்திய போது சாந்தி என்பவர், தனது வயிற்றுப் பகுதியில் ரூ.4 லட்சம் ரொக்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அதற்கான காரணத்தை சாந்தியிடம் கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். ரூ.4 லட்சத்திற்கான சரியான ஆவணங்களை, பறக்கும் படையினரிடம் காண்பிக்க முடியவில்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயந்தி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மடத்துக்குளம் தாசில்தார் கனிமொழி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story