கோவை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 1000 பேருக்கு கொரோனா தடுப்பூசி


கொரோனா தடுப்பூசி
x
கொரோனா தடுப்பூசி
தினத்தந்தி 24 March 2021 5:02 AM IST (Updated: 24 March 2021 5:21 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 1000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கோவை,

கோவையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 3 மாதங்கள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகளவு இருந்தது. அப்போது தினமும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 600 முதல் 700 வரை இருந்தது. 

அதன்பிறகு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களின் தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த மாதம் வரை கொரோனா தொற்று சற்று கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாகவே கொரோனா வைரஸ் படிப்படியாக உயர்ந்து மக்களை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. 

இந்த வைரசின் கொட்டத்தை அடக்குவதற்காக இந்தியாவில் 2 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அப்போது கோவையில் கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைந்து இருந்தது. 

இதனால் முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் போதிய ஆர்வம் இல்லை. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் அச்சுறுத்துவதால் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தற்போது மிகுந்த ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்கின்றனர். 

இதுதவிர தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4 நாட்களாக தினமும்1,000 பேர் வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக முதியவர்கள் பலர்  ஆர்வத்துடன் கோவேக்சின் என்ற தடுப்பூசியை செலுத்திக்கொள்கின்றனர்.
இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கோவேக்சின், கோவிஷீல்டு என 2 வகையான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 

தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் இதில் எதுவேண்டுமானாலும் தேர்வு செய்து செலுத்திக்கொள்ளலாம். நான் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். இந்த 2 தடுப்பூசிகளும் நல்லதுதான்.

மேலும் கடந்த சில நாட்களாக தினமும் 900 பேர் முதல் 1,000 பேர் வரை இங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 17 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

இங்கு கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு என்று தனித்தனியாக பதிவு செய்யப்படுகிறது. 

அத்துடன் மருத்துவ பணியாளர்கள், தேர்தல் பணியாளர்கள் எனவும் பிரிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முன்வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story