இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன் - அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் பேசி வாக்கு சேகரித்தார்.
அன்னவாசல்,
விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சத்திரம், மாதாகோவில், மேட்டுப்பட்டி, முக்கண்ணா மலைப்பட்டி, புதூர், காட்டுப் பட்டி, குளவாய்ப்பட்டி, வவ்வாநேரி, காலாடிப்பட்டி, வாதிரிப்பட்டி, மழவராயன் பட்டி, குப்பத்துப்பட்டி, ராப்பூசல், வெள்ளாஞ்சார், வீரப்பட்டி, தன்னங்குடி, இருந்திரப்பட்டி, புங்கினிப் பட்டி, சத்தியநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.
முக்கண்ணாமலைப் பட்டியில் இஸ்லாமியர்கள் மத்தியில் விஜயபாஸ்கர் பேசியதாவது:-
நான் உங்களிடம் அமைச்சராக வரவில்லை. உங்கள் வீட்டு பிள்ளையாக இங்கு வந்துள்ளேன். சாதி, மதம், பார்க்காமல் உங்களுக் காக உழைக்க கூடியவன் யார் என்று மட்டும் பாருங்கள். அப்போது தெரிவது எனது முகமாகத்தான் இருக்கும். ஏனெனில் 10 வருடமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
அரசியல் வேறு, கூட்டணி வேறு. என்னை தாண்டி முக்கண்ணாமலைப்பட்டி இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன். இதை எழுதி தருகிறேன். முக்கண்ணா மலைப்பட்டிக்கு அரசு மருத்துவமனை, அரசுமேல் நிலைப்பள்ளி, திருச்சிக்கு அரசு பஸ் வசதி, புதிய பள்ளிகட்டிடம், கூடுதல் ரேஷன்கடை, முக்கிய இடங்களான பள்ளிவாசல், மாதாகோவில், பிள்ளையார் கோவில் ஊரணிகரை, பஸ் நிலையம், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உயர் கோபுர மின்விளக்கு, குடிநீர் வசதி, சாலைவசதி உள்பட பல்வேறு நலதிட்டங்களை செய்து தந்துள்ளேன்.
எனக்கு 24 மணிநேரம் உழைக்க தெரியும், கஷ்டப்பட தெரியும், நல்ல பல திட்டங்களை கொண்டுவந்து சேர்க்க தெரியும். ஆகவே எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை இந்த தொகுதி மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன். கடந்த 10 ஆண்டுகளில் விராலிமலை தொகுதியை மாற்றி காட்டியுள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசார நிகழ்ச்சியில் அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, ஹாஜியார் சாகுல்அமீது, சோலை.சாகுல்அமீது, அபிபுல்லா, ஜமால்முகமது, அசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் முக்கண்ணாமலைப்பட்டியில் தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து அப்துல்சமது, முகமதுஅனிபா, நூர்முகமது, சாகுல்அமீது, கலிபுல்லா, உமர், ஜாபர், ஜபருல்லா, முத்தலீப், முகமதுரபீக், பிரேம்நசீர், அமீது, ஜமால் உள்ளிட்ட பலர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
Related Tags :
Next Story