போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள்


போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள்
x
தினத்தந்தி 24 March 2021 9:26 PM IST (Updated: 24 March 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர்:
வேடசந்தூரில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் குபேந்திரன் (வயது 52). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜ், பழனிசாமி, குமரேசன், குழந்தை ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குபேந்திரன், குடும்ப பஸ்பாஸ் வாங்குவதற்காக வேடசந்தூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயராஜ், பழனிசாமி, குமரேசன், குழந்தை ஆகியோர் திடீரென்று பணிமனைக்குள் புகுந்து, குபேந்திரனை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் இதுதொடர்பாக வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
ஆனால் இந்த சம்பவம் நடந்து 2 நாட்களாகியும், குபேந்திரனை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வேடசந்தூர் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் நேற்று மாலை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, குபேந்திரனை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். 
உடனே போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கண்டக்டரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கலைந்து சென்றனர். 

Next Story