புதுக்கோட்டையில் ரூ.3 கோடி நகைகள் சிக்கின


புதுக்கோட்டையில் ரூ.3 கோடி நகைகள் சிக்கின
x
தினத்தந்தி 26 March 2021 2:49 AM IST (Updated: 26 March 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.3 கோடி நகைகள் சிக்கின.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேப்பரை என்ற பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் அதிகளவு தங்க நகைகள் இருந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த வேனை நகைகளுடன் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வைத்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் சேலத்தில் இருந்து பட்டுக்கோட்டை சென்று அங்குள்ள ஒரு நகைக்கடையில் நகைகளை கொடுத்துவிட்டு மற்ற நகைகளுடன் புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. ஆனால், அந்த நகைகள் கொண்டு வருவதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லாததால் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிக்குமார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
வருமான வரித்துறையினர் விசாரணை
அதனைத்தொடர்ந்து வருமான வரி அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த தங்க நகைகள் தமிழகத்தில் உள்ள தனிக்‌ஷ் நகைக்கடையில் இருந்து மற்ற நகைக்கடைகளுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இருப்பினும் அதற்கு உண்டான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. மேலும் அவற்றிற்கு முறையாக ஜி.எஸ்.டி. கட்டப்பட்டுள்ளதா? வருமான வரித்துறை கணக்கில் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த நகைகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் அந்த நகைகள் ஒப்படைக்கப்படும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார். பிடிபட்ட தங்க நகைகள் 6 கிலோ 843 கிராம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.3 கோடியே 17 லட்சமாகும். கடந்த 20-ந் தேதி கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தச்சன்குறிச்சி அருகில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.5 கோடியே 92 லட்சம் தங்க நகைகள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story