80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டுப்பதிவு

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டுப்பதிவு
கோவை,
வருகிற சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க சிரமமாக இருப்பதாக கூறி அவர்களுக்கு வர இருக்கிற தேர்தலில் முதன்முதலாக தபால் ஓட்டுகள் வழங்கப்படுகின்றன
அதன்படி கோவை மாவட்டத்தில் சுமார் 62 ஆயிரம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்களும், 18 ஆயிரம் பேர் மாற்று திறனாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு தபால் ஓட்டுகள் வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை மனு அளிப்பதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது.
அந்த அவகாசம் முடிந்த பின்னர் கோவை மாவட்டத்தில் சுமார் 7 ஆயிரத்து 854 பேர் தான் தங்களுக்கு தபால் வாக்குகள் வேண்டும் என்று கோரியிருந்தனர்.
அதன்பேரில் அவர்களுக்கு மட்டும் தபால் வாக்குகள் வழங்குவதற்கான பணிகளை தேர்தல் பிரிவு ஊழியர்கள் செய்து வருகிறார்கள். தபால் வாக்குகள் போட வேண்டுமென்றால் அதற்கு அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வேண்டும்.
இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 21-ந் தேதி வெளியிடப்பட்ட பின்னர் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி இரவு பகலாக நடந்தது. அந்த வாக்குச்சீட்டுகள் தற்போது தயாராகி விட்டன. இந்த நிலையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தபால் ஓட்டுகள் வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் வினியோகிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது-
தபால் ஓட்டுக்கு தேவையான படிவங்கள், வாக்குச்சீட்டுகள் உள்பட பல்வேறு ஆவணங்கள்தயார் படுத்தப்பட்டு விட்டன. அவை அனைத்தும் ஒரு உறையில் போடப்பட்டுள்ளது. தபால் ஓட்டுகள் வேண்டும் என்று ஏற்கனவே விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே அவை வழங்கப்படும்.
இதற்காக அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் உத்தரவின்பேரில் தேர்தல் பிரிவு ஊழியர்கள், போலீசார், அந்த பகுதி வாக்குச்சாவடி அதிகாரி ஆகியோர் 80 வயதுக்கு மேற்பட்டவரின் வீட்டுக்கு சென்று தபால் வாக்குகளை வழங்குவார்கள்.
அவர் தான் வாக்காளர் என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் வாக்குச்சாவடியில் திரை பயன்படுத்தப்படுவதை போல மறைவான பகுதியில் அந்த வாக்காளர் தனது வாக்குச்சீட்டில் வாக்கை பதிவு செய்வார். அதன்பின்னர் அந்த வாக்குச்சீட்டு உறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு அதை அதிகாரிகள் பெற்றுக் கொள்வார்கள்.
பின்னர் அந்த தபால் ஓட்டு அதிகாரிகள் முன்னிலையில் பெட்டியில் போடப்படும். அதன்பிறகு அந்த பெட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் பத்திரமாக வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் அன்று மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story