அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்; நன்னிலம் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் பிரசாரம்

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நன்னிலம் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் பிரசாரம் செய்தார்.
பெண்கள் ஆரத்தி எடுத்தனர்
நன்னிலம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு நடத்தி வருகிறார். நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட சன்னாநல்லூர், தூத்துக்குடி, நல்லமாங்குடி, நன்னிலம், மாப்பிள்ளை குப்பம், நன்னிலம் தெற்கு ஒன்றியத்தில் கீழ்குடி, ஸ்ரீவாஞ்சியம், அச்சுதமங்கலம், வடகுடி, ஆலங்குடி, முடிகொண்டான், பூந்தோட்டம், அகரதிருமாளம் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியத்தில் வண்டாம்பாளை, பெரும்புகழூர், நாகக்குடி ஆகிய இடங்களில் அமைச்சர் காமராஜ் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவரை பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர்.
நன்றி செலுத்துவதற்காக
சன்னாநல்லூரில் பிரசாரத்தின் போது அமைச்சர் காமராஜ் கூறியதாவது:- நன்னிலம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகின்ற நான் உங்களிடத்தில் வாக்கு கேட்பதற்காக மட்டும் வரவில்லை. நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது உயிர் பிழைத்து வரவேண்டும் என நன்னிலம் தொகுதியில் அனைத்து கோவில்களிலும் வழிபாடு நடத்தினீர்கள். உங்கள் பிரார்த்தனையால் தான் உயிர் பிழைத்து வந்துள்ளேன் என திடமாக நம்புகிறேன். அதற்கு நன்றி செலுத்துவதற்காகவே மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி வந்திருக்கிறேன். உங்களுக்கு எனது குடும்பம் மட்டுமல்ல, எனது சந்ததி மட்டுமல்ல, என்னுடைய பரம்பரையே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியில் சட்டசபை உறுப்பினராகவும், உணவுத்துறை அமைச்சராகவும் உங்களையே சுற்றி சுற்றியே வந்துள்ளேன்.
அதிக வாக்குகள் வித்தியாசம்
உங்களுடைய கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தந்துள்ளேன். இன்றைய கோரிக்கைகள் நாளைக்கு நிறைவேறியது என்று சொல்லக்கூடிய அளவுக்கு என்னுடைய பணிகள் அமைந்தது. இங்கு கல்லூரி, பாலங்கள், சாலைகள் இவைகளையெல்லாம் உங்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் செய்து தந்துள்ளேன். நான் 9½ ஆண்டு காலம் உணவுத்துறை அமைச்சராக இருந்தாலும் அகந்தையில்லாமல் உங்களில் ஒருவனாக, உங்கள் சகோதரனாகவே பழகி வந்துள்ளேன். நான் முதல் முறை போட்டியிட்டபோது 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தீர்கள். இரண்டாவது முறை போட்டியிட்டபோது 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். மூன்றாவது முறை உங்கள் வீட்டுப் பிள்ளையாக வந்து நிற்கிறேன். கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கோபால், ஆசைமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story