மோடியை கண்டித்து கருப்புக்கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர்


மோடியை கண்டித்து கருப்புக்கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர்
x
தினத்தந்தி 31 March 2021 11:06 AM IST (Updated: 31 March 2021 11:06 AM IST)
t-max-icont-min-icon

கருப்புக்கொடி காட்ட முயன்ற 60 பேர் கைது

கோவை

மோடியை கண்டித்து கருப்புக்கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத் தில் உலக நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்தது. 

இதை கண்டித்து கோவை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தாராபுரத்தில் பா.ஜ.க. தலைவர் முருகனை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வருவதற்கு முன்னதாக பிரதமர் மோடியை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று காலை 9.30 மணிக்கு பீளமேட்டில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

60 பேர் கைது

அவர்கள், மோடியே திரும்பி போ என்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காத மோடியே திரும்பி போ என்று மோடியை கண்டித்து கோஷமிட்டனர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி செல்ல முயன்ற னர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் 10 பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்தனர்.

கைதான தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் சுசி கலையரசன், திராவிட தமிழர் கட்சி வெண்மணி, தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்த இளவேனில், மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்த ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் அங்குள்ள ஒரு மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


இந்த நிலையில், பிரதமர் மோடி கோவை விமான நிலையத்துக்கு காலை 11.30 மணிக்கு வந்தார். அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு சென்றார். 

பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்து தனி விமானத்தில் சென்னை சென்றார்.


Next Story