செந்துறை அருகே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பஞ்சதாங்கி அணை கட்டப்படும் - அ.தி.மு.க. வேட்பாளர் நத்தம் விசுவநாதன் வாக்குறுதி


செந்துறை அருகே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பஞ்சதாங்கி அணை கட்டப்படும் - அ.தி.மு.க. வேட்பாளர் நத்தம் விசுவநாதன் வாக்குறுதி
x
தினத்தந்தி 31 March 2021 3:23 PM IST (Updated: 31 March 2021 3:23 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று செந்துறை அருகே பஞ்சதாங்கி அணை கட்டப்படும் என்று நத்தம் விசுவநாதன் பேசினார்.

செந்துறை,

நத்தம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று இவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று செந்துறை அருகே குடகிப்பட்டி, பழனிபட்டி, அடைக்கனூர், தொண்டபுரி, மணக்காட்டூர், குப்புளிபட்டி, சுக்காம்பட்டி, வேப்பம்பட்டி, கோட்டைப்பட்டி, பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் வீதி, வீதியாக சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

பின்னர் அவர் பொதுமக்களிடையே பேசியதாவது:-

நத்தம் அருகே கரந்தமலை வடக்கு பகுதியில் அய்யனார் அருவி உள்ளது. வனப்பகுதியில் பல சுனைகளில் இருந்து வரும் தண்ணீர் மூலிகைகளுடன் கலந்து சிற்றருவியாக உருவாவதால் மருத்துவகுணம் கொண்டதாக உள்ளது. எனவே திருமலைக்கேணிக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். மேலும் வாரவிடுமுறை நாட்களில் சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

ஆனால் அய்யனார் அருவி பகுதிக்கு செல்ல சரியான பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே பக்தர்கள் நீராடி செல்வதற்கு ஏதுவாக அங்கு அடிப்படை வசதிகள் செய்து சிறந்த சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோடாங்கிபட்டி, பழனிபட்டி ஆகிய பகுதிகளில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான பஞ்சதாங்கி அணை விரைவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தேர்தல் அறிக்கையின்படி வீடுதோறும் விலையில்லா 6 சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச கேபிள் இணைப்பு, பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 என பல்வேறு நலத்திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும். எனவே மக்கள் மீண்டும் நல்லாட்சி அமைய அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்ய வேண்டும். நீங்கள் மறக்காமல் வருகிற 6-ந்தேதி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர் சின்னு, மாவட்ட கவுன்சிலர் சின்னாக்கவுண்டர், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், ஊராட்சி தலைவர்கள் சவரிமுத்து, தேன்மொழி முருகன், சூர்யா, மாவட்ட விவசாய அணி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் வேலுசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சார்லஸ், செல்வராஜ், வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ஆரோக்கியசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, வடக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி செயலாளர் நெல்சன், வடக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Next Story