ஓய்வு பெற்ற 141 ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாண நிகழ்ச்சி


ஓய்வு பெற்ற 141 ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாண நிகழ்ச்சி
x
தினத்தந்தி 31 March 2021 11:00 PM IST (Updated: 31 March 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே உள்ள எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் முதன்முறையாக பயிற்சி பெற்ற ஓய்வு பெற்ற 141 ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாண நிகழ்ச்சி நடந்தது.

குன்னூர்,

குன்னூர் அருகே வெலிங்டன் பேரக்ஸில் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் உள்ளது. இங்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா,  தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி முடிந்ததும் ராணுவ வீரர்கள் சத்திய பிரமாணம் கொடுக்கப்பட்டு பணிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இங்கு இதுவரை ராணுவ வீரர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 141 பேர் பாதுகாப்பு தளவாட தொழிற்சாலையில் பாதுகாவலராக பணியாற்ற தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதன்முதலாக இங்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 6 வாரம் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி முடிந்தது.

இதையடுத்து அவர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராணுவ முகாம் கமாண்டென்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர்சிங் சத்திய பிரமாணம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:- 

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மீண்டும் பாதுகாப்பு தளவாட தொழிற் சாலையில் பணியாற்ற பயிற்சி பெற்று உள்ளீர்கள். உங்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்த அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்கள். 

நீங்கள் ராணுவத்தில் இருந்தபோது எப்படி கடமை உணர்ச்சியுடன் பணியாற்றினீர்களோ அதுபோன்று இப்போது நீங்கள் வேலை செய்யும் பாதுகாப்பு தளவாட தொழிற்சாலையில் கடமை உணர்ச்சியுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்ந்து அணிவகுப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நின்றனர். 

Next Story